குடியரசு தினத்தை முன்னிட்டு 128 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு விருதாளர்கள் நிராகரித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு உட்பட நாடு முழுவதும் 128 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மறைந்த முப்படை தலைமை தளபதிக்குப் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது வேண்டாம் என அவர் நிராகரித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 77 வயதான அவர், சில காலமாக இதயம் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்களுடன் வயது மூப்பு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.
இந்நிலையில் அவர் தனக்கு அறிவித்த பத்மபூஷன் விருதை நிராகரித்துள்ளார். இதுகுறித்து தன்னிடம் யாரும் கூறவில்லை என்றும், ஆனால் தனக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், விருது வழங்குவது தொடர்பாக உள்துறை செயலாளர் பட்டாச்சார்யாவின் மனைவியிடம் பேசியதாகவும், அவர் விருதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறி நன்றி தெரிவித்ததாகவும் உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “பத்மபூஷன் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். அரசின் இத்தகைய விருதுகளை நிராகரிப்பது கட்சியின் நிலையான கொள்கையாகும். எங்களின் பணி விருதுகளுக்கானது அல்ல, மக்களுக்கானது” என்று கூறியுள்ளது.
பட்டாச்சார்யாவைத் தொடர்ந்து மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜி தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை நிராகரித்துள்ளார்.
சந்தியா முகர்ஜியின் மகள் சௌமி சென்குப்தா கூறுகையில், “ 90 வயதில் விருது வழங்குவது அவமதிப்பது போல இருப்பதாகச் சந்தியா முகர்ஜி கூறியதாகவும் பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டியது என்றும் அதனால் இந்த விருதுகளை அவர் நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பட்டாச்சார்யா விருதை நிராகரித்ததற்கு அரசியல் பின்புலம்தான் காரணம் என்று கூறும் நிலையில், சந்தியா முகர்ஜி நிராகரித்ததற்கு அரசியல் காரணமில்லை என்றும், சாதனை படைத்த கலைஞர்களைக்
காலம் கடந்து கௌரவிப்பதை எதிர்க்கவே இதை மறுக்கிறார் என்றும் சௌமி சென்குப்தா தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,