திராவிட அரசியலா? தமிழ்த்தேசிய அரசியலா? தேவை என்ன? – பகுதி 5:

Published On:

| By Balaji

b> பாஸ்கர் செல்வராஜ்

சமீபத்தில் தமிழக அரசு திராவிடக் களஞ்சியம் உருவாக்கப் போவதாக கொடுத்த அறிவிப்பை அடுத்து நாம் திராவிடரா, தமிழரா என்ற அடையாளச் சண்டை தமிழ்த்தேசியர்கள் மத்தியில் உக்கிரமாக நடைபெற்றது. அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்தக் காலத்தில் நாம் இந்தியா முழுக்க வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் திராவிட மூதாதையர் வழிவந்து பல இனங்களாகப் பிரிந்த இனங்களில் ஒன்றான தமிழினம் என்பது ஏற்கனவே மரபணு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்தச் சண்டையை வெறும் அடையாளம் சார்ந்ததாக பார்ப்பதில் அர்த்தம் இல்லை; இது அரசியல் அதிகாரம் சார்ந்தது. இந்தச் சண்டையின் ஒரு தரப்பு திராவிடத்தை மறுத்து அதற்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறது. மறு தரப்பு திராவிட அரசியலை ஏற்று அதன் வளர்ச்சியாக தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறது. இந்த இரு தரப்பும் முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தின் சமூகப் பொருளாதார அரசியல் அடித்தளம் என்ன? தமிழ்நாட்டில் இன்று அதற்கான தேவை என்ன?

**தேசிய வகைகள்**

இதுவரையிலான தேசியங்களை 1. விவசாய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட அதற்கான நிலத்தை எதிரியிடம் இருந்து காக்கும் நோக்கம் கொண்ட நிலவுடைமையின் அடிப்படையிலான தேசியம் 2. தொழிற்துறை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட இதற்கான சந்தையை எதிரியிடம் இருந்து காக்கும் பொருட்டு உருவான தேசியம் 3. இந்த நிலவுடைவாதிகளின் நலனையும், முதலாளிகளின் நலனையும் மறுத்த பாட்டாளிகளின் சர்வதேசியம் என மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் வகைக்கான சமூக பின்புலம் பல்வேறு குலம், இனக்குழுக்களைக் கொண்ட மக்களும் அவர்களின் வாழ்வாதாரம் அந்த விவசாயத்தை சார்ந்ததுமாக இருக்கிறது. நாமெல்லாம் ஒத்த மொழி, பண்பாட்டைக் கொண்டவர்கள். நமது இருவரின் நலனும் இந்த நிலத்தைக் காப்பதில்தான் இருக்கிறது என்ற அரசியலின் மூலம் அந்தத் தேசியத்துக்கான அந்தந்த இனக்குழுக்களின் இசைவைப் பெறுகிறார்கள். அதில் ஒரு சிலருக்கு இதன் பலனைக் கொடுத்து மக்களைத் திரட்டி தேசியத்தைக் கட்டமைக்கிறார்கள்.

இரண்டாவது வகையில் இனக்குழுக்கள் மறைந்து ஏழை, பணக்காரன் என வர்க்கமாக மாறிவிட்ட மக்கள் சமூகம்தான் வேறுபாடு. மற்றபடி, இந்தத் தேசியத்திற்கான அரசியல் அதே இருவரும் பலனடைகிறோம், இருவரின் வாழ்வும் இதைச் கட்டிக் காப்பதில்தான் இருக்கிறது எனும் கதைதான். மூன்றாவதாக முன்வைக்கும் சர்வதேசியத்தில், இந்தத் தேசிய கதையாடல்களில், உற்பத்தியில், போட்டியில், அதனால் விளையும் போரின் மூலம் பலனை அனுபவிப்பது நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும்தான். இந்தத் தேசிய, இன, பண்பாட்டு பெருமிதத்தில் நமக்கு எள்ளளவும் பயனில்லை. எதற்கும் உதவாத இந்த அடையாளங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளர்களாக உலகம் முழுக்க இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். நமக்கான உற்பத்தியை நாமே திட்டமிட்டுச் செய்துகொண்டு வாழ்வோம் என்பது. முதல் இரண்டு வகையில் இந்த தமிழ்த்தேசியர்கள் எந்த வகையில் அடங்குகிறார்கள் என்பதைக் காண தமிழகத்தின் திராவிட, தமிழ்த்தேசிய அரசியலை பெரியார் எப்படி கட்டமைத்தார் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

**தமிழகத்தில் திராவிட, தமிழ்த்தேசிய அரசியல்!**

சோழர்களின் ஆட்சியின்போது தமிழகத்தில் பார்ப்பனர்கள் குடியேற்றப்பட்டு வலுவான சாதிய அடுக்குமுறை கட்டமைக்கப்படுகிறது. இவர்களின் ஆட்சியின்போதும், இவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் வரும் விஜயநகர, ஆங்கிலேயர் ஆட்சியின்போதும் பார்ப்பனர்கள் படிப்படியாக வலுவான நிலவுடைமை சக்தியாக வளர்ந்து அரசியல் ஆதிக்கம் பெறுகிறார்கள். முன்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடைநிலை சாதிகளைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இது இந்த இரு ஆளும்வர்க்கத்துக்கு இடையிலான போட்டியையும், மோதலையும் தோற்றுவிக்கிறது. இதன் வெளிப்பாடாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ், பார்ப்பனரல்லாதாரின் நீதிக்கட்சி என இந்த இருவரின் நலனை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளைத் தோற்றுவிக்கிறது. இந்த இரு ஆளும்வர்க்கத்தையும் மறுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தி பெரியார் சுயமரியாதை இயக்க அரசியலை முன்வைக்கிறார்.

அன்றைய ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியிலும், ஆங்கிலேயே ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சியின் அரசியல் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சியே அன்றைய தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தது. இதனிடையில் 1. இந்திய சாதிகளைப் பற்றி ஆய்வு செய்யும் அம்பேத்கர் இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்றும், சூத்திர, பஞ்சம சாதிகள் எனப்படுவோர் இந்தப் பூர்வகுடிகளின் வழித்தோன்றல்களே; நால்வர்ண நிலைநாட்டலின்போது அதை மறுத்த சூத்திரர்களில் இருந்து விலக்கப்பட்டவர்களே தீண்டத்தகாத மக்கள்; அந்த வகையில் இந்த இரு பிரிவும் சகோதர(ரி)களே என்ற முடிவை அறிவிக்கிறார். 2. உலகப் போர்களின் காரணமாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது முடிவான நிலையில் இந்திய ஆட்சி அதிகாரம் பார்ப்பனியம் ஆட்சி செலுத்தும் காங்கிரஸ் கைகளில் செல்வதும் இந்தியாவில் மீண்டும் பார்ப்பனியம் ஆட்சிக்கு வருவதையும் சரியாக பெரியார் கணிக்கிறார். 3. இந்தியா முழுக்க உள்ள தேசிய இனங்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்களுக்கான தனிநாட்டு கோரிக்கைகளை நோக்கி நகர்கின்றன.

**அம்பேத்கரின் அறிவியலும், பெரியாரின் அரசியலும்!**

பார்ப்பனியத்துக்கு எதிராக அரசியல் செய்துகொண்டிருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திடம் அதை அடையும் பொருளாதார அடித்தளம் இல்லை. பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவான பொருளாதார வலுகொண்ட நிலவுடைமையாளர்களின் நீதிக்கட்சிக்கு வலுவான அரசியல் அடித்தளம் இல்லை. இருவருக்கும் பார்ப்பனியமும் பார்ப்பனர்களும்தான் எதிரி என்ற வகையிலும் வேகமாக மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழலும் இவர்களின் இணைவைக் கோருகிறது. வடக்கில் உள்ளதைப் போன்ற நால்வர்ண கட்டமைப்பற்ற, தென்னிந்திய நிலவுடைமை வர்க்கத்தின் பொருளாதாரப் பின்புலத்தையும், உழைக்கும் மக்களின் அரசியல் அடித்தளத்தையும் அடிப்படையாகக் கொண்ட இருவரின் நலனை உள்ளடக்கிய திராவிட அரசியலாக அது இங்கே பரிணமிக்கிறது. அது திராவிட இயக்கமாக உதிக்கிறது. அம்பேத்கர் கண்டறிந்த சமூக அறிவியல் உண்மை இங்கே திராவிடர் – திராவிடர் அல்லாதார் என்ற அரசியல் வடிவம் பெறுகிறது.

தென்னிந்தியாவை தனி நாடாக்கும் கோரிக்கையாக மலர்கிறது. அடிப்படையில் மிகச் சரியான இந்த அரசியல் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைப் போன்ற பார்ப்பனியத்துக்கு உள்ளான மோதலோ, பார்ப்பனியத்துக்கு எதிரான வரலாறோ, அரசியல் சூழலோ மற்ற மாநிலங்களில் இல்லை. இங்கிருப்பதைப் போன்ற பார்ப்பனியத்துக்கு எதிரான நீண்ட நெடிய போராட்டமும் அரசியல் முன்னெடுப்பும் அங்கே இல்லை. பொதுவாக நிலவுடைமை சக்திகளுக்கு பார்ப்பனியம் தேவை; அது விரும்பி அவர்களால் கொண்டு வரப்பட்டது. அதை ஒழிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. இவர்களின் இருப்புக்கும், வளத்துக்கும் தேவையான பண்ணையடிமைகளை அதுதானே கொடுத்துக் கொண்டிருந்தது. அப்படி இருக்க அவர்கள் ஏன் அதை ஒழிக்க வேண்டும்? எனவே, எதிர்பார்த்த அளவு இந்தக் கோரிக்கை வெற்றி பெறாத நிலையில் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தில் இருந்து தமிழகத்தை விடுவிக்கும் பொருட்டு தனித்தமிழ்நாடு கோரிக்கையை பெரியார் கையில் எடுக்கிறார்.

**பெரியாரின் திராவிடமும், தமிழ்த்தேசியம்**

தமிழக நிலவுடைமை சக்திகளுக்கும் பார்ப்பனர்களிடம் இழந்த ஆதிக்கத்தையும், அரசியல் அதிகாரத்தையும் திரும்பப் பெறுவதுதான் நோக்கமே தவிர, பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டுவதல்ல. அப்படியான நோக்கம் இருந்தால் இதற்கு முன்பே சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்திருப்பார்கள். காலம் கனியும்வரை காத்திருந்திருக்க மாட்டார்கள். இந்த மாறுபட்ட நோக்கம் திராவிடர் கழகத்தை உடைத்து திமுக உருவாக்கத்துக்கு வித்திடுகிறது. இந்த நிலவுடையாளர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அண்ணாவின் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி கொள்கை வடிவம் பெறுகிறது. பொருளாதார அடித்தளம் அகன்ற நிலையில், சீனாவைப் போல ஒன்றுபட்ட ஓரினமாக வளர்ந்த சமூக வளர்ச்சியோ, அவர்களைப் போன்ற புரட்சிகர கோரிக்கைகளோ, அதை சாதிக்கும் ஆயுதம் தாங்கிய கட்சியோ, வெளியில் இருந்து கிடைத்த வலுவான ரஷ்ய ஆதரவோ இல்லாத நிலையில் பெரியார் முயன்ற தமிழ்த்தேசியம் தோல்வியைத் தழுவுகிறது.

இந்தத் தமிழ்த்தேசிய அரசியல் தோல்விக்கு இது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அன்று ஒன்றிய பார்ப்பனியம் தன்னை கட்டமைக்கும் நிலையில்தான் இருந்தது. அது கட்டுப்படுத்தும், காலப்போக்கில் ஒடுக்கும் என்ற பெரியாரின் பார்வையை எல்லோரும் கொண்டிருக்கவில்லை அல்லது புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல ஒன்றிய பார்ப்பனியம் நிலவுடைமையுடன் சமரசம் செய்துகொள்ள தயாராகவும் இருந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகான அதன் செயல்பாடுகள் அதைத்தான் காட்டுகிறது. ஆனால், திராவிட அரசியல் இங்கே நிலைத்து நின்று வெற்றி பெறுகிறது. பொது எதிரிக்கு எதிரான இந்த அரசியல் வெற்றிக்கான காரணம் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியில் இருக்கிறது. பார்ப்பனியம் மற்ற பகுதிகளைவிட தமிழகத்துக்கு தாமதமாகவே வருகிறது. அதுவரையிலான இந்தச் சமூகத்தின் வளர்ச்சி இயல்பானதும், மேம்பட்டதாகவும் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

**வெற்றியின் சூத்திரம்**

இங்கே அப்போதும் சரி, இப்போதும் சரி தமிழ்ச் சமூகம் சாதிய-இனக்குழு சமூகமாக இருந்தாலும் அது கொண்டிருந்த பார்ப்பனிய எதிர்ப்புணர்வு, பொது எதிரிக்கு எதிராக திரளும் இனக்குழுக்களின் இயல்பு, அதற்கு ஏற்ற மிகச் சரியாக எதிரியை அடையாளம் கண்டு அதற்கு எதிராக தெளிவாகக் கோடிட்டு, திராவிடர் என்ற புதிய அடையாளத்தைக் கொடுத்து ஒன்றுபடுத்திய அறிவியல் பூர்வமான அரசியல் ஆகியவைதான் இந்த வெற்றிக்கான சூத்திரமாக இருக்கிறது. அது இன்றுவரை தொடர்வதால் எதிரியால் வீழ்த்த முடியாத ஆயுதமாகவும் இருக்கிறது.

ஆக, பெரியார் காலத்திலேயே இந்த நிலவுடைமையின் அடிப்படையிலான தமிழ்த்தேசிய ரயில் அந்த அரசியல் நிலையத்தை விட்டு கடந்து சென்றுவிட்டது. திராவிட அரசியல்தான் சரியானது எனத் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டிக்கொண்டு நிற்கிறது. ஏன் இந்தத் தமிழ்த்தேசியர்கள் இன்றும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு இன்னும் நடைமேடையிலேயே கடந்து சென்றுவிட்ட ரயிலுக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறார்கள் என்ற கேள்விக்கு இவர்கள் முன்னிறுத்தும் விஷயங்களைக் கொண்டு விடை காணலாம். அதனடிப்படையில் இவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். 1. பழம்பெருமை பேசிக்கொண்டு நிலவுடைமை விழுமியங்களை மீட்டெடுக்க முயலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்ப்பனியத்துடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்பவர்கள் 2. சாதியை பார்ப்பனியத்தை மறுத்து நவீன புதிய விழுமியங்களுடன் தமிழர் என்ற ஒற்றை இன அடையாளத்தால் இணைய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.

**தமிழ்த்தேசிய ஆதரவு சொல்லும் சேதி!**

இந்த இருவரின் பக்கமும் இளைஞர்கள் திரளுகிறார்கள். முதல் வகையின் பின்னால் இன்னமும் இளைஞர்கள் அணி திரளுகிறார்கள் என்றால் நாம் முழுமையாக நிலவுடைமையில் இருந்தும் பார்ப்பனியத்தில் இருந்தும் விலகி வெகுதூரம் சென்றுவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. இரண்டாம் வகையின் பின்னால் அணி திரளுவது அதிலிருந்து நாம் விடுபட்டு சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது. உலகின் எந்த சமூகமும் பின்னோக்கி சென்றதாக வரலாறு இல்லை. ஆதலால் இந்த முதல் வகையினரும் அவர்களின் ஆதரவாளர்களும் நமது பொருளாதார வளர்ச்சியின் போக்கில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். நாம் வேகமாக வளர்ந்து சாதிய – இனக்குழு சமூகத்தில் இருந்து வர்க்க சமூகமாக மாறும்போது இரண்டாவது வகையினரின் அரசியல் முக்கியத்துவம் பெறலாம்.

இந்த முதலாளித்துவ தமிழ்த்தேசிய ரயிலை தமிழ்நாட்டில் இப்போதுதான் நாம் கட்ட ஆரம்பித்திருக்கிறோம். இது முழுமை அடைந்து பயணம் செய்து ரயில் நிலையத்தை அடைய வெகுகாலம் எடுக்கும். இதற்கு எழும் தடைகளை சூழல் கருதியும், தங்களின் நோக்கம் கருதியும் திராவிடத்துடன் கைகோத்து இரண்டாவது வகையினர் ஒற்றுமையாக எதிர்கொள்கிறார்கள். ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கிறார்கள். அதேசமயம் எல்லா சமூகங்களைப் போல ஆண்டான் – அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவச் சமூகம் பின்பு முதலாளித்துவச் சமூகம் என சீரான வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை.

**வேண்டியது என்ன?**

இப்போதைய ஆட்சியே மக்களின் நலனையும். முதலாளிகளின் நலனையும் முன்னெடுக்கும் சமூகநல அரசாகத்தான் இருக்கிறது. இனி வரப்போகும் ஆட்சி முழுதான முதலாளிகளின் சந்தை நலனை பிரதிபலிக்கும் தமிழ்த்தேசிய அரசு என்பது எப்படிச் சரியாக இருக்க முடியும். பெரியாரும் சரி, அம்பேத்கரும் சரி தங்கள் காலங்களில் புதிய சூழலுக்கு ஏற்ப பல புதிய முயற்சிகளை எடுக்க தயங்கியதில்லை. அது தோல்வியடையும்போது அதிலேயே நின்றுவிடாமல் தொடர்ந்து பயணிக்காமல் இருந்ததும் இல்லை. இந்தியாவிலும் சரி, உலகிலும் சரி… அரசியல் பொருளாதார சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப அம்பேத்கர், பெரியாரின் வழியில் அவ்வாறான தன்மைகளுடன் இருப்பதன் மூலம்தான் அவர்களையும் அவரது கொள்கைகளையும் உண்மையாக உணர்ந்து பின்பற்றி வளர்த்தெடுப்பவர்களாக இருக்க முடியும். அதுதான் பாட்டாளிகளின் நலனை முன்னிறுத்தி செய்யும் அரசியலாகவும் இருக்க முடியும். இல்லையேல் இந்த அரசியல் தேங்கி நின்றுவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இறுதியாக, இந்த திராவிட அரசியலுக்கு மாற்று வேண்டும் என்ற தரப்பினரின் தொடர் குற்றச்சாட்டும், வாதமும் இந்த அரசியலின் ஊழலும், வாரிசு அரசியலும். இந்த ஊழல் உலகம் முழுக்க இருக்கிறது. வாரிசு அரசியல் இந்தியக் கட்சிகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. போட்டி முதலாளித்துவ பொருளாதார முறையை அனுமதித்துவிட்டு ஊழல், ஊழல் எனக் கூப்பாடு போடுவது கிருமியை உடலில் வைத்துக் கொண்டு மூக்கில் சளியாக ஒழுகுகிறது என்று அலுத்துக் கொள்வதைப் போன்றது. அதேபோல சாதிய-இனக்குழு சமூகம் கண்முன்னால் எதார்த்தமாக இருக்கும்போது இந்த மக்களின் அரசியல் வாரிசு அரசியலாக இல்லாமல் வர்க்க அரசியலாகவா இருக்கும். பூனைகள் ஈனும் குட்டிகள் என்ன புலிக்குட்டிகளாகவா இருக்கும். இப்படிக் கூறுவதால் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. முதலாளித்துவம் இருக்கும்வரை ஊழல் இருக்கும். சமூகம் இனக்குழு கட்டமைப்பைக் கொண்டிருக்கும்வரை அது வாரிசு அரசியல் தன்மை கொண்டதாகத்தான் இருக்கும். இதைக் கட்டுப்படுத்தவோ, மட்டுப்படுத்தவோ முடியுமே ஒழிய, முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. உண்மையிலேயே ஒழிக்க நினைப்பவர்கள் இந்த முதலாளித்துவ பொருளாதார முறையையும், சாதிய கட்டமைப்பையும் எப்படி மாற்றி அமைப்பது என்று விவாதிப்பதுதான் சரியான அரசியல் செயல்பாடாக இருக்கும். அதுவல்லாத எதுவும் வெற்றுக் கூப்பாடாகவும், எதிரணிக்கு மறைமுகமாகச் செய்யும் சேவையாகவும்தான் இருக்கும்.

**[பகுதி 1 ](https://minnambalam.com/politics/2021/10/13/6/marring-in-close-blood-relations-in-TamilNadu)** / **[பகுதி 2 ](https://minnambalam.com/politics/2021/10/14/9/unchanged-muslim-practices-and-aryans-race)** / **[பகுதி 3 ](https://minnambalam.com/politics/2021/10/15/8/India-and-Afganisthan-social-similarities)** / **[பகுதி 4 ](https://minnambalam.com/politics/2021/10/16/6/when-will-women-liberalise-from-retrograde)**

**நிறைவடைந்தது **

**பாஸ்கர் செல்வராஜ்**

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு **[naturebas84@gmail.com](mailto:naturebas84@gmail.com)**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share