ஜனவரி 17 ஆம் தேதி உலகப் பொருளாதார மன்றத்தின் (வேர்ல்டு எகனாமிக் ஃபாரம்) 2022 க்கான உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அந்த உரையில் பிரதமர் மோடி தனது உரையை திடீரென நிறுத்தி, திரும்பிப் பார்க்கிறார். காதுகளில் பொருந்திய இயர் போனை சரி செய்கிறார். பிறகு தயக்கத்தோடு ஓரிரு நொடிகளில் உரையை மீண்டும் தொடர்ந்தார்.
இந்த காட்சி சமூக தளங்கள் முழுதும் அன்று பெரும் வைரலாகின. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் பலரும், “பிரதமர் வழக்கமாக பயன்படுத்தும் டெலி ப்ராம்ப்டர் செயலிழந்ததே இதற்குக் காரணம். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் மோடியால் உரை நிகழ்த்த முடியாது” என்று மோடியை பகடியும் கேலியும் செய்து அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்தனர்.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு #TelepromptorPM என்ற ஹேஷ்டேக்குடன் 37 வினாடி வீடியோவை வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் பொய்களை டெலி ப்ராம்ப்டராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று பதிவிட்டார்.
லட்சக் கணக்கானோர் இப்படி பிரதமர் மோடியை சமூக தளங்களில் கிண்டல் செய்து வந்த நிலையில் உண்மையிலேயே பிரதமர் மோடி தடுமாறினாரா என்று ஃபேக்ட் செக் ஊடகங்கள் விசாரித்தன. அதன் பின்னரே பிரதமரின் தடுமாற்றத்துக்குக் காரணம் தெரியவந்தது.
“உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஆன்லைன் நிகழ்வில் பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பான சர்ச்சையைப் புரிந்து கொள்ள, தடுமாற்றத்திற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் வரிசையை அறிந்து கொள்வது அவசியம்.
பிரதமர் மோடியின் உரை நரேந்திர மோடியின் யு ட்யூப் பக்கம்,, தூர்தர்ஷனின் யு ட்யூப் பக்கம், உலகப் பொருளாதார மன்றத்தின் யு ட்யூப் சேனல் ஆகியவற்றில் கிடைக்கிறது. தூர்தர்ஷன் மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் சேனல்களில் இருக்கும் இந்த தடுமாற்றக் காட்சி, நரேந்திர மோடியின் யு ட்யூப் சேனலில் இல்லை.
தூர்தர்ஷனின் வீடியோ பதிப்பில் பிரதமர் மோடி ஏற்கனவே ஆறு நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உரையின் இந்தப் பகுதி WEFன் YouTube சேனலில் ஒளிபரப்பப்படவில்லை. உண்மையில், அந்த நேரத்தில் WEF இன் லைவ் ஸ்ட்ரீமின் முதல் எட்டு நிமிடங்கள் காலியாக உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் தொகுப்பாளரான WEF நிர்வாகத் தலைவர் கிளாஸ் ஸ்வாப் ஆகியோர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் தனது உரையைத் தொடங்கினார். ஆனால் முறையான அறிமுகம் இல்லாமல் அவர் தனது பேச்சைத் தொடங்கிவிட்டார். உலகப் பொருளாதார மன்றம் சார்பில் நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஸ்வாப் பிரதமர் மோடியை முறைப்படி வரவேற்கும் முன்னமே மோடி உரையைத் தொடங்கிவிட்டார். அதனால்தான் இந்த பேச்சு பிரதமர் மோடியின் தனிப்பட்ட யு ட்யூப் பக்கத்தில் ஒளிபரபப்பட்டபோது கூட உலகப் பொருளாதார மன்றத்தின் யு ட்யூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவில்லை.
மோடி பேச ஆரம்பித்ததும், அவரது குழுவில் இருந்த ஒருவர், ‘முறையான வரவேற்பு இன்னும் முடியவில்லை’ என்று எச்சரித்தார். இதை மைக்ரோஃபோன் மூலம் கேட்குமாறு பிரதமரிடம் ஒருவர் கூறுவதும் கேட்கிறது. அதன் பிறகு மோடி தனது இயர்போனை இணைத்து அமைப்பாளர்களிடம், ‘நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா?” என்று வினவுகிறார். இந்த குழப்பத்தில் சில நொடிகள் போகின்றன. ‘எங்கள் மொழிபெயர்ப்பாளரின் குரல் உங்களுக்குக் கேட்கிறதா?” என்று மீண்டும் கேட்கிறார் மோடி.
அதன் பின் குழப்பம் களையப்பட்ட பிறகு, ஸ்வாப் மோடியைப் பற்றிய அறிமுகம் செய்த பிறகு. அதிகாரப்பூர்வ அமர்வு மீண்டும் தொடங்கும் என்று பரிந்துரைக்கிறார். அதன் பின் பிரதமர் மோடி தனது உரையை மீண்டும் தொடங்கினார்.
ஆகவே இந்தத் தடுமாற்றம் என்பது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட தொடர்பு இடைவெளி (கம்யூனிகேஷன் கேப்) யால் ஏற்பட்டதே தவிர, டெலிப்ராம்ப்டர் குறைபாடு அல்ல” என்று உண்மை கண்டறியும் தளங்களில் புகழ்பெற்றதான தி ஆல்ட் இணைய தளம், தி வீக் உள்ளிட்ட தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே பிரதமரின் பேச்சுத் திறமை பற்றியும் அவரது டெலிப்ராம்ப்டர் பற்றிய விமர்சனங்களும் அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்டதே தவிர வேறொன்றும் இல்லை.
**-ராகவேந்திரா ஆரா**
�,