ஆளுநருக்கு எதிர்ப்பு : விசிக வெளிநடப்பு!

Published On:

| By Balaji

நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து விசிக வெளிநடப்பு செய்தது.

2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆர்.என்.ரவி தனது முதல் உரையை ஆற்றினார். அவரது உரையை தற்போது சபாநாயகர் அப்பாவு தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

இதனிடையே ஆளுநர் உரையைப் புறக்கணித்து விசிக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக கூட்டணியில் இருக்கும் விசிக எம்.எல்.ஏ.க்களான சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷானவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து வெளிநடப்பு செய்ததாக விசிக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்.எல்.ஏ.சிந்தனை செல்வன், “ஆளுநரின் உரை மீது எங்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், திமுக தலைமையில் இதே மாமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் வழியாகக் குடியரசுத் தலைவருக்குச் சென்றடைந்திருக்க வேண்டும்.

ஏறக்குறைய 6 மாதங்களாக அந்த சட்ட முன்வடிவு ஆளுநரின் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழக மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகிற ஆளுநரின் இந்த நடைமுறையைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஆளுநரின் உரைக்கு அல்ல, ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வளவு காலதாமதம் செய்வது தமிழக மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share