குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி விவாதிப்பதற்காக இன்று ( ஜூன் 15) டெல்லியில் மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இது தேசிய அரசியலில் ஒரு முக்கியமான விஷயமாக கவனிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் கூடிய இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி., தேசிய மாநாட்டுக் கட்சி. மக்கள் ஜனநாயக கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தள், ராஷ்டிரிய சோசஷிச கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டிரிய லோக் தள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஷிரோமணி அகாலி தளம், பிஜு ஜனதா தள் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். தனக்கு இன்னும் தீவிரமான அரசியலில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாக அவர் கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இரண்டு மணி நேர கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை முடிவு செய்ய இன்று நாங்கள் கூடியிருக்கிறோம். பல மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இங்கே ஒன்றாகியிருக்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும். அனைத்து தலைவர்களும் ஒருமனதாக சரத் பவார் ஜியை ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை என்பதால், மீண்டும் நாங்கள் கூடி பரிசீலனை செய்ய இருக்கிறோம்.
கூட்டத்தில் பல கட்சிகள் கலந்து கொண்டது முக்கிய அம்சம். பல மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று, இரண்டு கட்சிகள் மட்டும் வரவில்லை. அதுவும் அவர்களுக்கான கடைசி நேர வேலைகளால் வரவில்லை. இத்தனை மாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்தது நல்ல விஷயம். நம் நாட்டில் புல்டோசிங் நடப்பதால் இதுபோன்ற பல கூட்டங்கள் நடக்கும். அனைத்து அரசு நிறுவனங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் ஒற்றுமை தொடர வேண்டும்” என்றார் மம்தா பானர்ஜி. வரும் 21 ஆம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்வதாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அகிலேஷ் யாதவ், மெகபூபா உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் முதல் முறையாக இதுபோன்ற நிகழ்வில் தலை காட்டினார்.
-**வேந்தன்**