சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கேபி முனுசாமி கூறியிருக்கிறார். இன்று (மார்ச் 1) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி இதைச் சொல்லியிருக்கிறார்.
அண்மைக் காலமாகவே அதிமுகவில் சில அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்கள். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘சின்னம்மா நிரபராதி. அவர் வெளியே வந்தால் மகிழ்ச்சி’ என்று கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூஅவ்வப்போது ‘சின்னம்மா’வுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார்.
இந்நிலையில் அண்மையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சசிகலா அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவது பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என்று பதில் அளித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் துணை ஒருங்கிணப்பாளர்களில் ஒருவரான கேபி முனுசாமி, “ மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரும் முன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு மத்திய அரசு செய்யாததால்தான் நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதிமுகவை வெல்ல முடியாததால் விரக்தியின் விளிம்பில் சென்ற ஸ்டாலினுக்கு தன்னம்பிக்கை போய்விட்டது” என்றவர் சசிகலா பற்றிய கேள்விக்கு,
“சசிகலா சட்டத்தின்படி சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு குறைவு. அப்படி ஒரு வேளை சசிகலா வெளியில் வந்தால் அவர் அதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு ஒரு போதும் இல்லை. அவருக்கு கதவு சாத்தப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார்.
ஜெயலலிதா இருக்கும்போதே 2011 ஆம் ஆண்டு சசிகலாவை விலக்கி வைத்தபோது நடந்த பொதுக்குழுவில், ‘அம்மா பிடிச்சு வச்சாதான் பிள்ளையார். இல்லேன்னா யாரும் சாணிதான்” என்று சசிகலாவை ஜெயலலிதா முன்னிலையிலேயே சாடியவர் கேபி முனுசாமி என்பது குறிப்பிடத் தக்கது.
**-வேந்தன்**�,