சிலிண்டர் விலை 8 மாதங்களில் 29% உயர்வு : அன்புமணி ராமதாஸ்

politics

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றிற்கு ரூ.15 அதிகரித்து, ரூ.915க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வது போன்று, தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி , சிலிண்டர் விலை பிப்ரவரி 4 ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15 ஆம் தேதி 50 ரூபாயும், அதே மாதம் கடைசியில் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டன.

தொடர்ந்து, மார்ச் மாதம் 1 ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்த நான்கு மாதங்களில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சமையல் எரிவாயு, 25 ரூபாய் உயர்த்தப்பட்டு,ரூ.875.50க்கு விற்கப்பட்டது. மீண்டும், செப்டம்பர் 1 ஆம் தேதி, சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து ரூ.900க்கு விற்கப்பட்டு வந்தது.

900 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்குவதா என்று மக்கள் மலைத்து போய் இருக்கிற நிலையில், இன்று(அக்டோபர் 6)சிலிண்டர் விலை மீண்டும் ரூ.15 அதிகரித்து ரூ.915க்கு விற்கப்படுகிறது.

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.200க்கு மேல் உயர்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 43.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1874.50க்கு விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், ”வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 900 ரூபாயிலிருந்து ரூ.915 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டாவது விலை உயர்வு இதுவாகும். சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ரூ.710 ஆக இருந்த எரிவாயு விலை இப்போது 205 ரூபாய் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருளான எரிவாயு விலை 8 மாதங்களில் 29% உயர்த்தப்பட்டிருப்பது சரியல்ல. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இல்லத்தரசி ஒருவர் கூறுகையில்,” இப்படி மாதாமாதம் சிலிண்டர் விலை உயர்ந்துகொண்டே சென்றால், நாங்கள் எப்படி சிலிண்டர் வாங்குவது, சமைப்பது.நான் ஆரம்பத்தில் சிலிண்டர் வாங்கும்போது 160 ரூபாயாக இருந்தது. இப்போ, 915ஆக உயர்ந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில், மாதத்தில் சிலிண்டருக்கே 1000 ரூபாய் செலவு செய்தால், மற்ற செலவுகளை எப்படி சமாளிப்பது. இந்த விலையேற்றத்தால் விறகு அடுப்புக்கு திரும்ப வேண்டியநிலைதான் வரும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *