சிறப்புக் கட்டுரை: சடலத்துக்கு உண்டா மனித உரிமை?

politics

எஸ்.வி.ராஜதுரை

அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்ட வழக்கில், அந்த மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து விரைவு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தின் அபகீர்த்தி வாய்ந்த தீர்ப்பைப் பற்றி புதிதாகச் சொல்வதற்கு நம்மிடம் ஏதும் இல்லை என்றாலும், ’ஒருமனதாக’ ஐந்து நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார்? அவரால் எழுதப்பட்ட தீர்ப்பை ‘முழுமனதோடு’ மற்ற நான்கு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதற்கான நியாயங்கள், தர்க்கங்கள் என்ன? அந்தத் தீர்ப்பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்ட ஆவணத்தை எழுதிய நீதிபதி யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் நீதித் துறையுடன் தொடர்புடைய நீதிபதிகள், வழக்குரைஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரால் தொடர்ந்து எழுப்பப்பட்டே வரும் என்பதை மறுப்பதற்கில்லை.

பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டதைச் சட்டவிரோதமான குற்றச் செயல் என்றும், அந்தக் குற்றச் செயல் தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கை லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அயோத்தி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர் என்பதை நினைத்து நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. **ஏனெனில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்குக்கும் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்ட குற்ற வழக்குக்கும் இடையே கடக்க முடியாத பெரும் சீன மதிலை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம்.**

**பாதை அமைத்து கொடுத்த உச்ச நீதிமன்றம்**

பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய இந்துத்துவ வெறியர்களுக்குத் தலைமை தாங்கிய 32 ‘தலைவர்கள்’ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற மிகக் கொடூரமான தீர்ப்பை லக்னோ சிபிஐ நீதிமன்றம் வழங்கியதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தது உச்ச நீதிமன்றம் ‘சிவில் வழக்கில்’ அளித்த தீர்ப்புதான்.

கடந்த 3-4 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் ரஃபேல் விமானம் வாங்கியதில் இருப்பதாகச் சொல்லப்படும் முறைகேடுகள், சிபிஐயின் இயக்குநர் இரவோடு இரவாக மாற்றப்பட்ட விவகாரம், ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கிய சிறப்புத் தகுதியை வெறும் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டமை, அதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதையும் சிறைச்சாலையாக மாற்றியமை, டெல்லி ஜமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டமை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெண்களும் குழந்தைகளும் டெல்லி ஷகீன்பாக்கில் நடத்தி வந்த அமைதிப் போராட்டத்தை நசுக்குவதற்காக கிழக்கு டெல்லியில் இந்துத்துவ வெறியர்களும் அமித் ஷாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினரும் நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் முதலிய விவகாரங்களில் தலையிட்டு **இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாத்து, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என்ற எண்ணம் இந்தியாவிலும் உலக அரங்குகளிலும் வலுப்பெற்று வருகிறது**

**பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பும் ஹத்ராஸ் சம்பவமும்**

லக்னோ சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ‘தீர்ப்பை’ சட்ட வல்லுநர்கள்கூட வரிக்கு வரி முழுமையாகப் படித்து முடிப்பதற்கு முன்பே, மோடியின் ‘ஆப்த நண்பர்களில்’ ஒருவரான ’யோகி’ ஆதித்யநாத் காட்டாட்சி நடத்தும் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமமொன்றிலுள்ள ஓர் இளம் தலித் பெண்மணி 14.9.2020 அன்று ’யோகி’யின் தாக்கூர் சாதியைச் சேர்ந்த நான்கு மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கும் கொடூரமான சித்ரவதைக்கும் ஆளாக்கப்பட்டதையும், முதலில் உத்தரப் பிரதேச அரசாங்க மருத்துவமனையிலும் பின்னர் டெல்லி அரசாங்க மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர் 29.9.2020அன்று இறந்து போனதையும், அவரது உடலை உத்தரப் பிரதேச போலீஸார் சிலர், அந்தப் பெண்மணியின் குடும்பத்துக்குத் தெரியாமலேயே, இரவோடு இரவாக எரித்துச் சாம்பலாக்கி விட்டதையும் கேள்வியுற்ற, மனசாட்சியை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்திய மக்கள் பிரிவினர் அறச்சீற்றத்தால் மனம் கொதித்துப் போயிருந்த நிலையில், உத்தரப் பிரதேசக் காவல் துறையின் உயர் அதிகாரியொருவர், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறாரேயன்றி வன்புணர்ச்சி செய்யப்படவில்லை என்று அறிக்கை விடுத்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது.

வன்புணர்ச்சி – சித்ரவதை – கொலைக் குற்றவாளிகளையும், அந்தப் பெண்ணின் உடலை குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமலேயே எரித்துச் சாம்பலாக்கிய காவல் துறையினரையும் ‘யோகி’யின் ஆட்சி பாதுகாக்கும் என்று கருதுவதற்கு அந்த ’யோகி’யின் ஆட்சியின் கீழ் மதச் சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் ஆகியோர் மீது நடத்தப்பட்டு வந்த வன்முறைகளும், கொலைகளும், இன்ன பிற கொடுஞ்செயல்களும் சாட்சியமாக இருப்பதைக் கருத்தில் கொண்டோ என்னவோ அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்தக் கொடூரமான நிகழ்வுகளை விசாரிக்க தானாகவே முன்வந்து, அக்டோபர் 12ஆம் தேதிக்குள் அந்த மாநில காவல் துறை, நிர்வாகத் துறை உயரதிகாரிகள் அந்த நீதிமன்றத்துக்கு வந்து நடந்த நிகழ்வுகளை நீதிபதிகள் முன் கூற வேண்டும் என்று ஆணையிட்டது. **இந்த நீதிமன்றத்தின் மீது நமக்குச் சற்று நம்பிக்கை ஏற்படக் காரணம், 2019இல் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டனம் செய்து பேசிய, கோரக்பூர் நகரைச் சேர்ந்த மருத்துவர் கலீல் கானை தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்னும் கொடிய சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது சட்டவிரோதமான செயல் என்று தீர்ப்புக் கூறி, அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அது ’யோகி’ அரசாங்கத்துக்கு ஆணை பிறப்பித்திருந்ததுதான்.**

எனவே, நெஞ்சில் ஈரப்பசையுள்ள நீதிபதிகள் கொண்ட ஆயமொன்று, தலித் பெண்மணி தொடர்பான வழக்கை தானாகவே நேரடியாக விசாரணை செய்து குற்றம் புரிந்தவர்களுக்கும் அவர்களது குற்றத்தை மூடிமறைக்க உதவிய காவல் துறை மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகளுக்கும் தக்க தண்டனை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியது. அந்த நிலையில், ‘யோகி’ அந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை வழங்க முன்வந்ததுடன் மேற்சொன்ன கொடூர நிகழ்வுகளைப் புலனாய்வு செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமித்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே அதை சிபிஐயின் கைக்கு மாற்றியது உண்மையை மூடிமறைக்கத்தான் என்று அந்த அபலைப் பெண்ணின் குடும்பத்தினர் நினைப்பதில் ஆச்சரியம் இல்லை.

**சடலங்களுக்கு மனித உரிமை உண்டா?**

அந்த தலித் அபலைப் பெண்ணின் உடல் இரவோடு இரவாக போலீஸாரால் எரித்து சாம்பலாக்கப்பட்ட நிகழ்வு, நம் எல்லோருக்கும் பொதுவான ஒரு கேள்வியை எழுப்புகிறது. ‘சடலங்களுக்கு மனித உரிமை உண்டா?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

காலங்காலமாகவே, உலகிலுள்ள பல்வேறு நாகரிகங்களும், மதங்களும் இறந்தவர்களின் உடல்களைக் கண்ணியமான முறையில் புதைக்கவோ, எரிக்கவோ வேண்டும் என்று கருதுகின்றன. **‘கல்யாணத்துக்குப் போகாவிட்டாலும் கருமாதிக்குப் போக வேண்டும்’ என்ற முதுமொழி கூறுவது போல, நம் நாட்டிலும் இறந்தவர்களும் அவர்களது உடல்களும் கண்ணியத்தோடு பார்க்கப்படுகின்றன.** மேலும், இறந்தவர்கள் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றோ ‘ மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார்’ என்றோ, ‘ இயற்கை எய்தினார்’ என்றோ கூறுவது உலகிலுள்ள எல்லா நாகரிகங்களிலும் காணப்படுகின்றன. நவீன காலத்தில் இறந்தவர்களின் உடலுக்குரிய கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான சட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் உருவாகியுள்ளன.

உயிருள்ள மனிதர்களைப் போலவே உயிரற்ற சடலங்களுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று சர்வதேச சட்டங்களும், இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியனவும் கூறுகின்றன. இவை சடலங்களைக் கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதையும் (அல்லது எரிப்பதையும்), அவற்றின் மீது குற்றங்களைப் புரிவதையும் கருத்தில் கொண்டுள்ளன.

போரில் கொல்லப்படுபவர்கள் தொடர்பான 1949ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தம், போரில் சம்பந்தப்பட்ட தரப்பினர், ”கொல்லப்பட்டவர்களின் (சடலங்களின்) பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று கூறுகிறது. அனைத்துலக மனித உரிமை அறிக்கையின் (Universal Declaration of Rights) பிரிவு 1, எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் சரிசமமான கண்ணியமும் உரிமைகளும் இருக்கின்றன என்று கூறுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் பிரிவு 21, அனைவருக்கும் உயிர் வாழும் சுதந்திரம் இருக்கிறது என்று கூறுகிறது. **‘உயிர் வாழும் சுதந்திரம்’ என்பது பல்வேறு காலகட்டங்களில் உச்ச நீதிமன்றத்தால் புதிய விளக்கங்கள் தரப்பட்டு, உணவு பெறும் உரிமை, வீட்டு வசதி பெறும் உரிமை, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழும் உரிமை, அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் உரிமை, தனிமைச் சிறையில் அடைக்கப்படாமல் இருக்கும் உரிமை, சட்ட உதவி பெறும் உரிமை ஆகியவற்றை மட்டுமின்றி இறந்தவர்கள் கண்ணியமான முறையில் புதைக்கப்படுவதையும் (அல்லது எரிக்கப்படுவதையும்) உள்ளடக்கியுள்ளது என்று பரமானந்த கட்டாரா எதிர் இந்திய ஒன்றிய அரசாங்கம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது** [Parmanand Katara v. Union of India & Ors, 1989 AIR 2039, 1989 SCR (3) 997]

அஷ்ரே அதிகார் எதிர் இந்திய ஒன்றிய அரசாங்கம் என்ற வழக்கில் , இறந்தவரின் உடல் அவரது மத சம்பிரதாயப்படி கண்ணியமான முறையில் அடக்கம் (அல்லது எரிக்கப்படுதல்) செய்யப்படுவது அரசாங்கத்தின் கடமை என்று தீர்ப்பளித்தது (Ashray Adhikar Abhiyan v. Union of India, 2002 WCP 143 of 2001)

ஒரு தனிநபரின் மதத்தைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது ஒரு மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனோ, ஒரு தனிநபரின் உணர்வுகள் புண்படுத்தப்படும் அல்லது அவரது மதம் இழிவுபடுத்தப்படும் என்பதை அறிந்தும் சடலங்கள் புதைக்கப்படும் (எரிக்கப்படும்) இடங்கள், வழிபாட்டு இடங்கள், சமாதிகள், இறுதிச் சடங்குகளுக்கென்றோ அல்லது இறந்தவர்களின் அஸ்திகளை வைப்பதற்கென்றோ ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியனவற்றில் அத்துமீறி நுழைவது, இறந்தவரின் சடலத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவது, இறுதிச்சடங்கை செய்வதற்காகக் குழுமியுள்ளவர்களுக்குத் தொல்லை தருவது ஆகியன **இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 297ஆம் பிரிவின் கீழ் குற்றமாகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்தவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இந்தக் குற்றச் செயல்களைப் புரிபவர்களை, நீதிமன்ற உத்தரவுகள் இல்லாமலேயே காவல் துறையினர் கைது செய்யலாம்.** (இந்தச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள் ஷாகின் பாக் போராட்டத்தை நசுக்குவதற்காக வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு கிழக்கு டெல்லியில் மசூதியையும் முஸ்லிம்களின் சமாதிகளையும் இடித்து நாசமாக்கிய இந்துத்துவ வெறியர்கள்தான்.)

அண்மையில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து, பின்னர் அதே தொற்று ஏற்பட்டதன் காரணமாக இறந்துபோனவரும், தனியார் மருத்துவமனையொன்றில் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றியவருமான சைமன் ஹெர்குலிஸின் உடல் கீழ்ப்பாக்கத்துக்கு அருகிலுள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது, வன்முறைக் கும்பலொன்றின் எதிர்ப்பின் காரணமாக அண்ணா நகரிலுள்ள இடுகாட்டில் புதைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 21, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 297 ஆகியவற்றின்படி கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்படும் உரிமை இறந்தவர்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தியது.

**குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 404இன்படி, இறந்தவரின் உடைமையை நேர்மையற்ற வகையில் அபகரித்துக்கொள்வது, மூன்றாண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத் தண்டனையோ, அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.** “இறந்தவரின் உடைமை” என்பதில் அவரது சடலமும் அடங்குமா என்பதைப் பற்றி நீதிமன்றங்கள் இதுவரை ஏதேனும் விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியவில்லை.

இறந்தவர்கள் மீதான அவதூறுகள் அவர்களது குடும்பத்தினர் அல்லது நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றால் அவை குற்றங்களாகக் கருதப்பட்டு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499, 503 ஆகியனவற்றின் கீழ் தண்டிக்க முடியும்.

**ஆனால் ‘இறந்தவர்’ என்பதற்கான விளக்கமோ, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை யாருக்கு உண்டு என்பதைப் பற்றிய தெளிவான வரையறையோ சட்டத்தில் இல்லை என்றாலும் அதைச் செய்யும் உரிமை அவரது குடும்பத்தாருக்கே உண்டு என்பது சம்பிரதாயமாக மக்கள் அனைவராலும், நீதிமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.**

ஒருவரின் சடலத்தை, அது பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யும் என்றாலோ (எடுத்துக்காட்டாக கோவிட்-19 தொற்று நோயால் இறந்து போனவர்களின் சடலங்கள்) அல்லது இயற்கையாகவின்றி கொலை, சித்ரவதை போன்றவற்றால் இறந்து போனவர்கள் மீது இழைக்கப்பட்ட குற்றத்தைப் புலனாய்வு செய்வதற்கோ அவர்களின் சடலங்களை எடுத்துக்கொள்ளும் உரிமை அரசுக்கு உண்டு (சவப் பரிசோதனை செய்த பிறகு அந்தச் சடலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்). உற்றார் உறவினர் எவராலும் உரிமை கொண்டாடாதபடி அநாதையாகக் கிடக்கும் சடலங்களை அறிவியல் ஆய்வுகளின் பொருட்டு அரசு எடுத்துக் கொள்ளலாம்.

**எப்படியிருந்தாலும் உயிருள்ளவர்களுக்குத் தரப்படும் உரிமைகள் யாவும் இறந்தவர்களின் சடலங்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டமும் பிற சட்டங்களும் வழங்குகின்றன.**

**நீதியை தீர்மானிக்கும் சக்திகள்**

ஆனால், வர்க்க, சாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ள இந்தியச் சமுதாயத்தில் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் இந்தச் சட்டங்கள் யாவும் அருவமானவையே என்பதையும் மிக அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இவர்களுக்கு சட்டப்படியான நீதி வழங்கப்படுகிறது என்பதையும் சொல்லத் தேவையில்லை. உயர் சாதி ஆணவம் (ஆதிக்கம்), உயர் சாதியினருக்கும் காவல் துறைக்கும் (அரசுக்கும்) உள்ள நெருக்கமான உறவு, பணபலம் என்ற முக்கூட்டுச் சக்தியாலேயே நியாயமும் நீதியும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஹத்ராஸ் மாவட்ட இளம் தலித் பெண் விஷயத்தைப் பொறுத்தவரை அவரது குடும்பத்தார் , மிக வலுவான உயர் சாதியினர், அவர்களைப் பாதுகாக்கும் முதலமைச்சர், அவரது கட்டளையின் கீழ் செயல்படும் காவல் துறை, நிர்வாகத் துறை ஆகியோரை எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த உயர் சாதியினர் கட்டைப் பஞ்சாயத்து நடத்தி, அந்த தலித் இளம் பெண் மீது குற்றங்களைச் செய்தவர்களுக்கு எல்லா வகையான உதவிகள் செய்வது, அந்தக் குற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள வரும் வெளியாட்களை அந்தப் பெண்ணின் கிராமத்துக்குள் நுழையவிடாமல் தடுப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

காவல் துறை தரப்பில், அந்த தலித் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறாரேயன்றி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, குற்றவாளிகள் எனக் கருதப்படும் எவருடைய விந்துவும் அந்தப் பெண்ணின் உடலில் இல்லை என்று தடயவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்ற பரப்புரை முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனினும் சவப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணுறுப்புகள் நுழைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எப்படி இருப்பினும், இப்போதுள்ள இந்தியச் சட்டங்கள் ‘பாலியல் பலாத்காரம்’ (Rape) என்பதை ‘ புணர்ச்சி’ என்பதற்குள் மட்டுப்படுத்தாமல், பெண்ணின் உடல்மீது அத்துமீறி கைவைப்பதையும்கூட உள்ளடக்குகின்றன.

ஆளும் பாஜக சார்பில் சங்கிகளுக்கே உரித்தான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் சாதிக் கலவரத்தை (உயர் சாதியினருக்கு எதிராக வால்மீகி சாதியினர் (அந்த தலித் பெண்ணின் சாதி. அந்த சாதியினரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு) தொடுக்கும் கலவரத்தை – உருவாக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தலித் அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன என்றும், இந்தக் கலவரத்தை எப்படி நடத்துவது என்பதற்கான வழிமுறைகளைப் பரப்புவதற்காக ஓர் இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதை உ.பி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என்றும், **இந்த முயற்சிகளுக்குப் பின்னால் அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சில முஸ்லிம் நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவி இருக்கின்றன என்றும் அங்குள்ள சங்கிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.**

**ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பொய்**

தமிழ்நாட்டில் தலித்துகள் மீது அன்றாடம் நடத்தப்பட்டு வரும் வன்கொடுமைகளைப் பற்றி சிறிதுகூட கவலைப்படாத தமிழ்நாட்டு சங்கிகள், **பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிடக் கூடாது என்று சட்டம் கூறுவதைகூடப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் பல இடங்களில் அந்தப் பெண்ணின் புகைப்படமும் பெயரும் இடம்பெற்றுள்ள ‘கண்ணீர் அஞ்சலி‘ சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.** “ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே பொய்” என்ற அவர்களது கொள்கைக்கேற்ப இந்த சுவரொட்டிகள் எல்லாவற்றிலும் ‘பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் இவை… “உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரசில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளம் பெண் …… அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்”. ஒரு சுவரொட்டியில் “கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட” என்று அச்சிடப்பட்டுள்ளது. கோயபல்ஸ்கூட வெட்கித் தலைகுனிகிறான்!

பிறப்பிலிருந்து இறப்பு வரை உயர் சாதியினரின் கொடுமைகளாலும் காவல் துறையின் அக்கிரமங்களாலும் அவதியுற்று சாம்பலாகிப் போன அந்த அபலைப் பெண்ணால் தனது சோகக் கதையை – சங்கிகளின் பொய்களை மறுதலிக்கும் கதையை – சொல்ல முடியுமா? கடுஞ்சீற்றத்துடன் யாரேனும் ஒரு தலித் எழுத்தாளர் அந்தப் பெண் கூறுவது போல ஒரு புனைவிலக்கியப் படைப்பை நமக்கு வழங்கக்கூடும் அல்லது அந்தப் பெண்ணின் சடலம் பேசுவது போலவும் அதை எழுதலாம். இதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உலக இலக்கியத்தில் இருக்கின்றன. சட்டென்று நினைவுக்கு வருவது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் (Han Kang) ‘மனிதச் செயல்பாடுகள்’ (Human Acts) என்னும் நாவலில் 1980இல் க்வாங்ஜு நகரில் தென்கொரிய சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியின்போது காவல் துறையாலும் ராணுவத்தாலும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர் ஒருவரின் சடலம் பேசுவது போல ஓர் அத்தியாயத்தை எழுதியிருக்கிறார்; லெபனான் நாட்டு எழுத்தாளர் எமிலி நஸ்ரல்லா (Emily Nasrallah) ‘குண்டு வெடிப்பு’ (‘Explosion’) என்ற சிறுகதையை எழுதியுள்ளார். ஒரு தாய் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு அவளுக்குப் பொம்மையொன்றை வாங்கித்தரச் சென்ற பேரங்காடியொன்றில் தீவிரவாதிகள் வெடித்த வெடிகுண்டில் இருவரது உடலும் சிதறிப் போக, சிதறிப் போன தாயின் உடல் பேசுவது போல எழுதப்பட்டுள்ளது அந்தச் சிறுகதை.

**கட்டுரையாளர் குறிப்பு**

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.