இல்லத்தரசிகளுக்கு ஊதியம்: இது யாருடைய திட்டம்?

Published On:

| By Balaji

திருச்சியில் நேற்று மார்ச் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுகவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதில் பெண்கள் மேம்பாடு தொடர்பாக ரேஷன்கார்டு வைத்திருக்கும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார் ஸ்டாலின் . இந்த வாக்குறுதி பெண்கள் மத்தியில் பரபரப்பாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து மக்கள் நீதி மையத்தின் பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய அக்கட்சி தலைவர் கமலஹாசன், “ இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது நான் அறிவித்த திட்டம். இதை ஸ்டாலின் காப்பியடித்து விட்டார்” என்று பேசினார்

இந்த நிலையில் தமிழக பாஜகவில் இருந்து இது குறித்து எதிர்க்குரல் எழுந்துள்ளது. இன்று (மார்ச்8) காலை தமிழக பாஜகவின் கலை கலாச்சாரப் பிரிவு தலைவரான காயத்ரி ஜெயராம்,

” அசாம் மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு ஒரு ரேஷன் அட்டைக்கு மாதம் 830 ரூபாய் வழங்கும் பாஜகவின் திட்டத்தை காப்பியடித்து தமிழ்நாட்டில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதுதான் உங்கள் தொலைநோக்குத் திட்டமா?” என்று கிண்டல் செய்துள்ளார்.

மேலும் கமல்ஹாசனையும் காயத்ரி ரகுராம் விட்டு வைக்கவில்லை. “அசாமில் பா ஜ க அரசு வழங்கி வரும் திட்டத்தை ஸ்டாலின் தான் காப்பியடிக்கிறார் என நினைத்தால் கமலஹாசன் இந்த திட்டத்திற்கு காப்பி ரைட் உரிமையே கேட்பார் போலிருக்கிறது. அவரும் ஸ்டாலின் போலவே இது மக்கள் நீதி மய்யத்தின் திட்டம் என்கிறார்.கமல் அவர்களே சினிமாவில் தான் ஹாலிவுட் படங்களை காப்பியடித்தீர்கள் அரசியலிலுமா!”என்று கேட்டிருக்கிறார்.

இதுபற்றி பாஜக வட்டாரத்தில் பேசியபோது, “ அஸ்ஸாமில் பாஜக அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தைக் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ரிபப்ளிக் டிவி யில் பெரிய அளவில் பிரேக்கிங் நியூஸ் ஆக வெளியிட்டார்கள். வழக்கமாக ஆங்கில சேனல்கள் அதிகமாக பார்க்கும் கமலஹாசன், இந்த செய்தியை படித்து விட்டுத்தான் தனது வாக்குறுதியாக அதை அப்போதைய தனது வாக்குறுதியாக வழங்கினார்.

இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஏற்கனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் பெண்கள் பற்றிய பட்டியலை தயாரித்து அவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்குவதற்கு திட்டங்களைத் தொடங்கினார். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சத்தை நெருங்கிய நிலையில் அதை ஆலோசனை செய்து அறிவிக்கலாம் என்று வைத்திருந்தார்கள். இந்நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் இதை இப்போது அறிவித்திருக்கிறார் ”என்கிறார்கள்.

வர இருக்கும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய ஆயிரம் ரூபாயை 1,500 ரூபாயாக உயர்த்தி இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்க ஒரு ஆலோசனை இன்று நடந்து வருகிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

யாருடைய மூளையாக இருந்தால் என்ன மக்களுக்குப் பயன்பட்டால் சரிதான்!

**-ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share