ராஜ்யசபாவுக்கு இம்முறை எப்படியாவது சென்றுவிடுவது என்று கோட்டை கட்டியிருந்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷின் திட்டத்தை, நேற்று (மார்ச் 9) அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் அதிரடியாக இடித்துத் தள்ளிவிட்டது.
ராஜ்யசபா இடத்துக்காக அதிமுக தலைவர்களையும், பாஜக தலைவர்களையும் பலமுறை சென்று சந்தித்தார் சுதீஷ். அண்மையில் டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா இல்லத் திருமணத்துக்கு சென்றபோதும்கூட பாஜக புள்ளிகளிடம், தேமுதிகவுக்கான ஒரு ராஜ்யசபா பற்றி வலியுறுத்திவிட்டு வந்தார்.
ஆனால், பாஜக மிகத் தெளிவாக வாசனுக்கு சப்போர்ட் செய்தது, நேற்றைய அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் மூலம் சுதீஷுக்கு தெரிந்துவிட்டது. பட்டியல் வெளியான சில நிமிடங்களில் கோபமான சுதீஷ், தனது மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். கடுமையான கோபத்திலும் அதிருப்தியிலும் தனது வீட்டுக்குள் முடங்கிவிட்டார்.
ஏனெனில் இந்த ராஜ்யசபா எம்பியை வைத்து கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்தார் சுதீஷ். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை என்றதும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
சுதீஷ் அப்செட் ஆனதை அறிந்த கழகத்தின் பொருளாளரும், அவரது அக்காவுமான பிரேமலதா சுதீஷை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவர் தொடர்பில் கிடைக்கவில்லை என்றதும் வீட்டுக்கே சென்றுவிட்டார். யாரையும் பார்க்க மறுத்த சுதீஷ், கொஞ்ச நேரத்துக்குப் பிறகே பிரேமலதாவிடம் பேசியிருக்கிறார்.
“நான் எனக்குன்னா இந்த சீட்டைக் கேட்டேன். கட்சிக்குனு கொடுத்தா நீங்க எம்பி ஆகியிருக்கலாமே? பாமகவும், தேமுதிகவும் சேர்ந்துதான் தேர்தல்ல உழைச்சோம். அவங்களும் ஜெயிக்கலை, நாமும் ஜெயிக்கலை. ஆனா அவங்களுக்கு மட்டும் எம்பி கொடுத்தாங்க. இப்ப நாம எந்த வகையில குறைஞ்சிட்டோம்னு தமாகாவுக்குக் கொடுத்திருக்காங்க? தேமுதிகவை விட தமாகா அவங்களுக்கு முக்கியமாயிடுச்சு பாத்தீங்களா?” என்று சுதீஷ் கேட்க பிரேமலதா அவரது கோபத்தைத் தணித்திருக்கிறார்.
“இதுல அதிமுகவை மட்டும் கோபப்பட்டு பிரயோஜனமில்லை. அவங்க பாஜக நெருக்கடிக்காகத்தான் தமாகாவுக்கு எம்பி சீட்டு கொடுத்திருக்காங்க. பாஜக சொல்லிதான் இதெல்லாம் நடக்குது. பொறுமையா இரு பேசுவோம். தேவைப்பட்டா நாம கூட்டணியக் கூட மறுபரிசீலனை செய்றது பற்றி விரிவா பேசி முடிவு பண்ணுவோம்” என்று தேற்றியிருக்கிறார்.
இதற்குப்பிறகுதான் நேற்று இரவு 10.53 மணிக்கு சுதீஷ் தனது ஃபேஸ்புக்கில், ‘நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், நமது சின்னம் முரசு’ என்று தேமுதிகவின் முரசு சின்னத்தின் படத்தை பதிவேற்றியிருக்கிறார்.
இதைப் பார்த்து பல தேமுதிக நிர்வாகிகளும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் பலர், “நாம் பொறுத்தது போதும். நமக்கு என்றுமே பிஜேபி நல்ல துணை இல்லை. ஏனென்றால் நம்மை வைத்தே கூட்டணி பேரம் நடத்தி நம்மை ஓவ்வொரு தேர்தலிலும் வீழ்த்துகின்றனர். 2014 முதல் இது தொடர்கிறது. நமக்கு எந்த சமயத்திலும் அவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் . கேப்டனா, வாசனா என்றால் வாசன் என்பர் . ரஜினியா? கேப்டனா? என்றால் ரஜினி என்பர். எனவே விழித்துக் கொள்வது நல்லது. நம்மை முன்பை விட பலமாக கட்டமைத்து நமது வலிமையை எதிரிக்கு உணர்த்துவோம்” என்ற ரீதியில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதையெல்லாம் சுதீஷ் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள்.
**-வேந்தன்**�,