திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதிலும், கூட்டணிக் கட்சிகள் அவரவர் சின்னத்தில் நிற்பதா, திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்பதா என்பதிலும் பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. அதற்கேற்றாற்போல் வைகோ, திருமாவளவன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சின்ன விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். சில கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு வலியுறுத்தப்படுகின்றன என்றும், 200 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காணப் போகிறது என்றும் வந்த செய்தியின் அடிப்படையில்தான் இந்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. .
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து இன்று (அக்டோபர் 12) விளக்கம் அளித்துள்ளார்.
“தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணி, தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கூடி, கலந்தாலோசனை செய்து, நேரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், இந்தக் கூட்டணி, வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமூகமான உறவு நிலையைக் கெடுத்து, திசைதிருப்பி விடலாம் என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன. ஊசிமுனைக் காதளவு துளையேனும் போட்டு, கழகக் கூட்டணியின் கட்டமைப்பை அசைக்க முடியுமா என்று அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆசையும் நோக்கமும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு எந்த வழியிலாவது உதவிட வேண்டும் என்பதுதான். அதற்கு ஓரிரண்டு பத்திரிகைகள் – ஊடகங்கள் துணை போவதும், அரசியல் விமர்சகர் – பத்திரிகையாளர் போர்வையில் ஒருசார்பு கருத்தாளர் சிலர் நுழைந்து விரிவுரை ஆற்றுவதும், எந்தவித பலனையும் தந்துவிடப் போவதில்லை என்பதை நன்கு அறிந்தே செய்கிறார்கள். அது எத்தகைய நடுநிலை, எப்படிப்பட்ட நேர்மை, எவ்வாறான மக்கள் பணி என எண்ணிப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது” என்று சாடியுள்ள ஸ்டாலின்,
“ 200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல!
தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை அதிகாரபூர்வமாக முடிவெடுத்து அறிவிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, 200 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடப் போகிறது என்ற அனுமானமும், அது தொடர்பான விவாதங்களும், தேவை அற்றவை மட்டுமல்ல; உள்நோக்கம் கொண்டவையும் ஆகும் என்று தமிழக மக்கள் அறிவார்கள்.
கழகக் கூட்டணியை மட்டும் குறி வைத்தே செய்திகள் வெளியிடப்படுவதும், விவாதங்களைக் கட்டமைப்பதும், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தகைய விவாதங்கள் பொழுதுபோக்கவே பயன்படும்”என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
மேலும், “அதீதமான கற்பனை மற்றும் அளவில்லா ஊகத்தின் அடிப்படையில், எதையாவது சொல்லி, வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள். கழகக் கூட்டணியை அந்தச் சக்திகளால் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. வெற்றிக் கூட்டணியாம், கழகக் கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை; எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
இதன் மூலம் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளார் திமுக தலைவர்.
**-வேந்தன்**�,