போலீஸ் + தொண்டர்கள்: கண்ணாடிப் பேரணியைக் காப்பாற்றிய கூட்டணி!

Published On:

| By Balaji

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக தோழமைக் கட்சிகள் நடத்திய பேரணி வெற்றிகரமாக நேற்று (டிசம்பர் 23) நடந்து முடிந்திருக்கிறது. வெற்றிகரமாக என்று குறிப்பிடுவதற்கான காரணம், சுமார் 40,000 பேர் திரண்ட பேரணியில் ஒரு துளி கிழிசல், விரிசல் வராமல் அமைதியாக முடிந்ததுதான்.

நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின், இதுபோன்ற பேரணியை நடத்தத் திட்டமிட்டபோது திமுக நிர்வாகிகளிடம் ஓர் அச்ச உணர்வு தென்பட்டது. ‘இந்தப் பேரணியில் வன்முறை வெடிக்கும்’ என்று ஹெச்.ராஜா போன்றவர்கள் ஆரூடம் சொன்னதுதான் அதற்குக் காரணம். இதுபோன்ற மாஸ் ஆன தருணங்களில் வன்முறை என்ற விளையாட்டை தொண்டன் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் நடத்திவிட்டுப் போய்விட முடியும். எனவே ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கும், மாவட்டச் செயலாளர்கள் தங்களின் அடுத்த நிலை நிர்வாகிகளுக்கும், அவர்கள் வழியே தொண்டர்களுக்கும் தெரிவித்த ஒரே செய்தி, ‘வாலை சுருட்டிக்கிட்டு ஒழுங்கா வரணும். இதுலதான் நம்ம இமேஜ் மட்டுமில்ல எதிர்கால வெற்றியும் அடங்கியிருக்கு’ என்பதுதான்.

**முழு பேரணி அல்ல**

இந்தப் பேரணியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து தொண்டர்களோ, நிர்வாகிகளோ வரக் கூடாது என்று சொல்லிவிட்டது தலைமை. அதனால் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் கலந்துகொள்ளவில்லை. சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் வந்திருந்தனர். தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களே பேரணிக்கு வந்திருந்தனர். இந்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மாசெக்கள் சிலர் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக்கூட பேரணிக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார் திமுக தலைவர்.

”இந்தக் கூட்டம் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த பகுதியில் இருந்தும் வந்ததில்லை. திமுகவின் ஒன்பது மாவட்டங்களிலும் சில பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்கள் கூட்டம்தான் இவ்வளவு. முழு திமுகவும் திரண்டிருந்தால் இன்னும் அதிகக் கூட்டமாகியிருக்கும்” என்கிறார் பேரணியில் கலந்துகொள்ளாமல் உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்டச் செயலாளர் ஒருவர்.

**உதயநிதியை கடைசியில் வரச் சொன்ன ஸ்டாலின்**

பேரணியில் கடைசிப் பகுதியாக இடம்பெற்றது திமுக இளைஞரணி. கூட்டத்தின் முன் பக்கத்தில் ஸ்டாலின், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வரிசையாக நடந்து வந்துகொண்டிருந்த நிலையில் திமுகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தலைமையில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பேரணியின் கடைசி பகுதியாக வந்துகொண்டிருந்தனர். உதயநிதி முன்னால் வந்தால் அது கூட்டணியின் பிற தலைவர்கள் பார்வையில் எப்படி இருக்குமோ என்று நினைத்த ஸ்டாலின் பேரணிக்கு முன்பே, ‘நீதான் பேரணிக்குப் பின்னால வரணும். இளைஞரணியை ஒழுங்கா கொண்டு வரணும்’ என்று சொல்லிவிட்டார். அதன்படியே மற்றவர்களுக்கு வழிவிட்டு கடைசியாய் வந்தார் உதயநிதி.

**கண்ணாடிப் பேரணியைக் காப்பாற்றிய தொண்டர்கள்**

வடமாவட்டம் ஒன்றிலிருந்து பேரணியில் கலந்துகொண்ட திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரிடம் பேரணி முடிந்து பேசினோம்.

“எங்க கட்சித் தலைவரா இருந்தாலும் ஸ்டாலினை நான் பல முறை எங்க கட்சிக்காரங்க மத்தியிலேயே விமர்சனம் பண்ணியிருக்கேன். ஆனா இன்னிக்கு பேரணியில நடந்து வந்தப்ப ஏற்பட்ட உணர்வு கலைஞர், உடன்பிறப்பேன்னு சொல்லும்போது எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. திமுக பேரணியில குடும்பம் குடும்பமா நிர்வாகிகள் கலந்துகிட்டாங்க. கடைசி திமுக தொண்டனோட பொறுப்புணர்வு இந்தப் பேரணியில வெளிப்பட்டுச்சு.

நாம ஆட்சியை இழந்து எட்டு வருஷங்களாச்சு. இந்தப் பேரணியில ஒரு கீறல் விழுந்தாகூட அதை வெடிப்பா பேசுறதுக்கு பல பேர் இருக்காங்க. அப்படி ஏதாவது செஞ்சு நம்ம தலையில நாமே மண் அள்ளிப் போட்டுக்கக் கூடாதுன்னு ஒரு சுயநலம். அதைத் தவிர இப்ப இருக்கிற மக்கள் எழுச்சியை திமுகவும் பயன்படுத்திக்கணும்,மக்களுக்கும் பயன்படணும். அதுக்கு கண்ணாடிபோல இந்தப் பேரணியை சிந்தாம சிதறாம கொண்டு போய் சேர்க்கணும் என்கிற பொறுப்புணர்வு தொண்டர்கள்கிட்ட இருந்ததை கண்கூடா பார்க்க முடிஞ்சது. இதே பொறுப்புணர்வை திமுக நிர்வாகிகளும் தொண்டர்கள்கிட்டேர்ந்து கத்துக்கணும்” என்றார்.

**பேரணியில் இடம்பெற்ற போலீஸ் அணி!**

பேரணி நிறைவுறும்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கும் நன்றி” என்று காவலர்களைப் பார்த்துக் கூறினார். இது பொதுவாக அனைத்து நிகழ்ச்சிகளிலுமே சொல்லும் சம்பிரதாய வார்த்தை இல்லை. ‘பாதுகாப்பு அளித்த போலீஸாருக்கு நன்றி’ என்று ஸ்டாலின் சொல்லியிருந்தால் அது சம்பிரதாயம். ஆனால், ‘பங்கேற்று’ என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தியதற்கு அர்த்தம் இருக்கிறது.

இந்தப் பேரணியில் போலீஸ்காரர்களின் பங்கு அளப்பரியது. “பேரணியின்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டால் இரண்டு மடங்கு வசூலிக்க வேண்டும். கேமராக்கள் கொண்டு கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

திமுகவிலேயே பலர், “ஜல்லிக்கட்டுல தமிழ்நாடு போலீஸ் பண்ண வன்முறையதான் டெல்லி போலீஸ் ஜாமியா பல்கலையில பண்ணுச்சு. மறுபடியும் தமிழ்நாடு போலீஸ் இந்தப் பேரணியில ஏதாவது செய்ய காத்திருக்கும். அதுக்கு நாம இடம் கொடுத்துடக் கூடாது’ என்று பேரணி தொடங்கும் முன்னே பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால், குவிந்திருந்த கண்காணிப்பு கேமராக்கள், வடஇந்திய ஊடகக் கேமராக்களுக்கு இடையே போலீஸாரால் ‘எதையும்’ செய்ய முடியவில்லை என்பதை விட, பேரணி அமைதியாய் நடப்பதற்கு போலீஸ் பெரும் அளவுக்கு பணியாற்றியது என்பதே உண்மை.

முதலில் கட்சித் தலைவர்களைத் தாண்டி தொண்டர்களுடன் சேர்த்து செக்யூரிட்டிகள் வளையம் ஏற்படுத்தியிருந்தனர். , பிறகு கட்சித் தலைவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க வளையம் அமைக்கப்பட்டது. அந்த வளையத்தைத் தாண்டியும், ஒரு கேமராமேன் உள்ளே விழும் அளவுக்குக் கூட்ட நெரிசலாகிவிட்டது. அதற்காக, அவரை பளாரென செக்யூரிட்டிகள் அறைந்தது முறையற்ற செயல்.

பேரணியின் தொடக்கத்தில் மேற்கண்ட சம்பவங்கள் அரங்கேறின. அதன்பின், ஒரு ராணுவப் பயிற்சியைப்போல சிதறாமல் ஒவ்வொரு கட்சியினராய் நடந்து சென்றுகொண்டே இருந்தனர். முதலில் போலீஸ்காரர்கள் ஒவ்வோர் அணியாக அரண் அமைத்து நடைபோட்டனர். ஒவ்வொரு போலீஸ் அரணுக்கும் டிராஃபிக் க்ளியர் செய்வது; கடைகளை மூடச் சொல்வது; வேறு வண்டிகள் குறுக்கே வராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளென அனைத்தும் கச்சிதமாய் போலீசாரால் நடைபெற்றன.

‘வழக்கறிஞர் அணி, இளைஞர் அணியைப் போலவே போலீஸ் அணியும் வந்தது போலவே இருந்தது. அந்த அளவுக்கு திமுகவுக்கும், எங்கள் தலைவருக்கும் போலீஸ் ஒத்துழைப்பு கொடுத்தது. சென்னையில் எந்த ஸ்டேஷனிலும் நேற்று இன்ஸ்பெக்டர்கள் இல்லை, அனைத்து ஏசிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் நினைத்தால் எதையும் செய்திருக்க முடியும். சில இடங்களில் இருந்து அவர்களுக்கு அழுத்தங்களும் வந்தன. ஆனால் இந்தப் பேரணி அமைதியாக நடக்க வேண்டும். திமுகவுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்று போலீஸ் உயரதிகாரிகளே நினைத்தனர். அதன் விளைவுதான் இந்தப் பேரணிக்கு போலீஸ் கொடுத்த ஒத்துழைப்பு. இது போலீஸின் மேலிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான முதல் அறிகுறி’ என்கிறார் இளைஞரணி மாநில நிர்வாகிகளில் ஒருவர்.

<�,"

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share