�
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர்கள் இன்று வேட்புமனு மனுதாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக தரப்பிலிருந்து தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று (மார்ச் 9) நண்பகல் 12 மணியளவில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஸ்டாலின் சகிதம் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனிடம், மூவரும் தனித்தனியாக வேட்புமனுவை மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் திமுகவின் முன்னணி தலைவர்களும், காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு மூவரும் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.
**எழில்**�,