திமுக மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்காதது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து 2014ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வானவர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக தரப்பிலிருந்து தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். திமுக தரப்பிலிருந்து திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு அதன் கூட்டணி கட்சியான தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் முயற்சித்து வருகின்றன. திமுக கூட்டணியிலிருந்து யாரும் சீட் கேட்டதாக பெரிய அளவில் செய்திகள் வெளியாகவில்லை.
ஆனால் திமுகவிடம் காங்கிரஸ் ராஜ்யசபா சீட் கேட்டதாகவும், அதனை ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாகவும் [டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை: மீண்டும் நிராகரித்த ஸ்டாலின்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/02/22/stalin-rejected-sonia-demand-again-dmk-congress-allaince-bjp) என்ற தலைப்பில் முதல்முதலாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம். அதனை தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக எங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்கியிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்போம். திமுக ஒதுக்காதது எங்களுக்கு வருத்தம்தான். இது வருத்தம்தானே ஒழிய கோபமல்ல. வருத்தம் என்பதும், கோபம் என்பது வேறு வேறு” என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், “வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸுடன் திமுக கலந்தாலோசித்தது. இந்த உடன்பாடு எழுத்துப்பூர்வமாக இருந்ததா அல்லது கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது எனக்கு சொல்லப்படவும் இல்லை” என்றும் கூறினார் கே.எஸ்.அழகிரி.
**எழில்**
�,