வரும் மார்ச் 26 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று (மார்ச் 1) திமுக தனது ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
இதன்படி தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வேட்பாளர்கள் என்றாலும் திமுக கூட்டணிக்கு போதிய பலம் இருப்பதால் இவர்கள் மூவரும் ராஜ்யசபா எம்பிக்கள் என்பது உறுதியாகிவிட்டது.
கடந்த முறை நடந்த ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு பதிலாக நிறுத்தப்பட்டு, பின் வாபஸ் பெற்றுக் கொண்டபோதே அடுத்த முறை உங்களுக்கே என என்.ஆர். இளங்கோவிடம் உறுதியளித்திருந்தார் ஸ்டாலின். அதன்படியே இப்போது இளங்கோவுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றியிருக்கிறார்.
அதேபோல திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படக் கூடுமென்று சில நாட்களாகவே எதிர்பார்ப்பு நிலவியது. அவருக்கு மீண்டும் அளிக்கப்படக் கூடாது என்று கட்சியிலே பலரும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ராஜ்யசபாவில் அவரது பெர்ஃபாமென்ஸ்சை வைத்து மீண்டும் சிவாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் ஸ்டாலின்.
இந்த முறை கொங்குச் சீமையில், அருந்ததியர் சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் திமுக சார்பில் ஓர் இஸ்லாமியர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படவேண்டும் என்று ஸ்டாலின் முன்பு கோரிக்கைகள் இருந்த நிலையில், இஸ்லாமியருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
**-வேந்தன்**�,