மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் கட்டண ரீடிங் குளறுபடிகளை கண்டித்தும், கட்டணத்தை எளிய மாத தவணைகளில் கட்ட அனுமதிக்கக்கோரியும் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 21) கறுப்பு கொடி ஏற்றியும், கையில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார். தன் கையில், ‘ஷாக் அடிப்பது மின்சாரமா, மின்கட்டணமா?’ என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தார். ரீடிங் எடுப்பதில் குழப்பக்கூடாது, கொரோனா காலத்தில் கொள்ளையடிக்காதே உள்ளிட்ட முழக்கங்களையும் ஸ்டாலின் எழுப்பினார்.
இதுபற்றி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்கட்டணக் கொள்ளையைக் கேள்வி கேட்டால் பச்சைப் பொய்யால் பசப்புகிறது அதிமுக அரசு. இன்று கறுப்புக் கொடி தாங்கினோம்; கண்டன முழக்கம் எழுப்பினோம். பொதுமக்களின் எதிர்ப்பினை பார்த்த பிறகாவது அவர்கள் மீது கருணை வையுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் காட்பாடியிலுள்ள தனது வீட்டின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த போராட்டத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், அன்பகத்தில் நடந்த போராட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். சிஐடி காலணி இல்லத்தில் மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதுபோலவே திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, விழுப்புரத்தில் பொன்முடி, கடலூர் முட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என திமுகவின் முன்னணி தலைவர்கள் தங்களது இல்லம் முன்பு கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், கொரோனா காலத்தில் மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
**எழில்**
�,”