முதல்வருக்கு நெருக்கடி: திமுகவின் மற்றொரு வழக்கு!

Published On:

| By Balaji

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மற்றொரு வழக்கை திமுக தொடர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11 கி.மீ நீள நெடுஞ்சாலைத் துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் துரை ஜெயக்குமார் என்னும் ஒப்பந்ததாரர் தொடர்ந்த வழக்கில், “32 பதிவு பெற்ற முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலையை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (MONOPOLY) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டது” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுபற்றி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கடந்த மே 6ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையரிடம் புகார் மனு அளித்தார். ஒரு மாதம் ஆகியும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று (ஜூன் 13) வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், “டெண்டர் என்பது வழக்கமாக ஓராண்டுக்குப் பிறப்பிக்கப்படும். ஆனால், இந்த டெண்டர் ஐந்து ஆண்டுகளுக்குக் கோரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டெண்டர் கோரும்போது ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் என்ற வீதத்தில் ஐந்து வருடத்துக்கு 500 கோடி மட்டுமே செலவாகும். தற்போது ஒட்டுமொத்தமாக டெண்டர் அளிக்கப்பட்டுள்ளதால் 800 கோடி வரை டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இயலாத நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் அமைச்சரான முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ள அவர்,

“கொரோனா காரணமாக நிதி நெருக்கடியில் உள்ள சூழலில், சாலை உட்கட்டமைப்பு செலவைக் குறைப்பதற்கு ஆராயவும், பெரிய திட்டங்களில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஆலோசனையை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே பாரத் இன்டர்நெட் டெண்டர் தொடர்பாக முதல்வருக்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த நாளே மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது முதல்வருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share