தொடர்ந்து 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து கடந்த மார்ச் 7 ஆம் தேதி இயற்கை எய்திய, பேராசிரியர் க. அன்பழகனின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி பற்றி திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி இன்று (மார்ச் 10) திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் படத்திறப்பு நிகழ்வு மார்ச் 14 ஆம் தேதி மாலை 5.30க்கு அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில், திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியரின் படத்தைத் திறந்து வைப்பார்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக ஈஸ்வரன், ஐஜேகே பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் மறைவை ஒட்டி திமுக ஒரு வாரகால துக்கம் அனுசரித்து வரும் நிலையில் , ஏழாவது நாள் படத்திறப்பு நிகழ்வு நடக்கிறது.
**-வேந்தன்**�,