தேர்தல் தேதி அவசரமாக அறிவிப்பு: திமுகவுக்கு வைத்த ஆப்பு!

politics

அதிர்ந்து போய்க்கிடக்கிறது தமிழக அரசியல் வட்டாரமே. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என யாருமே எதிர்பாராத நாளில் திடீரென தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். மார்ச் முதல் வாரத்தில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென்றுதான் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்ப தங்கள் திட்டங்களையும் வகுத்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து சென்ற மறுநாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டசபை முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதனால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பும் பெரும் பதற்றத்தில் இருப்பது பளிச்சென்று தெரிகிறது.

இப்படி திடீரென அறிவிப்பு வரலாம் என்பது ஆளும்கட்சிக்கும் முன் கூட்டியே தெரிந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் பிப்ரவரி 23 அன்றே இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து விட்டனர். தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலையில்தான் சென்னை திரும்பினார். வழக்கம்போல சட்டசபை காலையில் கூடியது. ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் இந்த சட்டசபைக் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணித்திருந்ததால் பதற்றமின்றி ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். ரிலாக்ஸ் ஆகவே எல்லோரும் காணப்பட்டனர்.

இன்று (நேற்று) மாலை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாக நேற்று காலையில் தகவல் பரவியதும் எல்லோருக்குள்ளும் பதற்றம் பற்றிக்கொண்டது. அப்போதும் வேறு ஏதாவது அறிவிப்பு இருக்கவே வாய்ப்புண்டு; அடுத்த வாரம்தான் அறிவிப்பார்கள் என்றெல்லாம் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் பேசிக்கொண்டதையும் கேட்க முடிந்தது. ஆனாலும் வேகவேகமாக கேள்வி நேரத்தை முடித்தார் சபாநாயகர். மதியம் 12 மணிக்குள் 110 விதியின் கீழ் முதல்வர் பல சலுகைகளை அறிவித்தார். தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் நகை வரையில் அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்றார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அமைச்சர்களில் தங்கமணி, மணியன் இருவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினர். மற்றவர்கள் பலரும் பேசுவதற்கு அனுமதி கோரியபோதும் அனுமதி தரப்படவில்லை. அறிவிப்புகளை முடித்துவிட்டு முதல்வர் வேகமாக தன் அறைக்குச் சென்றார். சபையில் இருந்த அமைச்சர்களும் தங்கள் அறைகளை நோக்கிச் சென்றனர். ஐஏஎஸ் அதிகாரிகளும், அவர்களுக்குக் கீழிருக்கின்ற உதவியாளர்களும் கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்குமாக அலைய தலைமைச் செயலகமே தகதகவென பரபரப்பு பற்றிக்கொண்டது.

மதியம் மீண்டும் சட்டசபை கூடுவதற்கு முன்பே, முதல்வரை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார். அப்போதே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறப் போகிறது என்று தகவல் வெளியானது. அதன்படியே பட்ஜெட் உரை விவாதத்தில் பலரும் பேசி முடித்ததும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டசபை முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. தேர்தல் தேதி இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படுமென்று தெரியாததால்தான் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆளும்கட்சி தரப்பில் விளக்கம் தருகின்றனர். ஆனால் இந்தத் தகவல் முதல்வருக்கு முந்தைய நாள் இரவே உளவுத்துறை மூலமாகத் தெரிந்து விட்டதை ஐ.பி.எஸ்., வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

இன்னும் பல கோப்புகளில் அமைச்சர்கள் கையெழுத்திட வேண்டியிருந்த நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வந்ததில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் பதற்றமாகியுள்ளனர். முந்தைய தேதியிட்டு கையெழுத்திடுவதற்கு முயற்சி நடந்து, அது அதிகாரிகள் மூலமாக வெளியில் கசிந்து விடும் அபாயம் இருப்பதால் சில அமைச்சர்கள் நேற்று மிகமிகப் பரபரப்பாகக் காணப்பட்டனர். ஆனால் ஆளும்கட்சியை விட திமுகவுக்குதான் இதில் பேரதிர்ச்சி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

‘‘தேர்தல் தேதிகள் அனைத்தும் பாரதிய ஜனதாவுக்கு விருப்பமான நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இருவருடைய விருப்பப்படியே இந்த தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன!’’ என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதுவரை தேர்தல் ஆணையம் குறித்து எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு, தங்களைக் குறி வைத்து நடந்த தாக்குதல் என்றுதான் திமுக தலைமையும் நினைப்பதாகத் தெரிகிறது. அதேநேரத்தில் இதுபற்றி எந்தக் கருத்தையும் அக்கட்சியின் சார்பில் யாரும் வெளியிடவில்லை.

இவ்வளவு அவசரமாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கான காரணமென்ன என்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். தமிழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்…

‘‘நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டாலும், இவ்வளவு குறுகிய காலத்தில் தேர்தல் தேதியை நிர்ணயித்ததற்குக் காரணம் தமிழகம்தான். பிரதமர் தமிழக விசிட்டை முடித்து விட்டு திரும்பியதுமே, தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு அங்கிருந்து சிக்னல் தரப்பட்டது. அதற்கு தமிழகத்தில் அவருக்குக் கிடைத்த உளவுத்துறை தகவல்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கான செலவுகளுக்கு திமுக திணறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அந்தக் கட்சிக்குப் பணம் வரும் வழிகள் அனைத்தும் குறிப்பிட்ட சில ஐ.டி.ரெய்டுகளால் அடைக்கப்பட்டுவிட்டன. தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால் இனியும் பணம் வருவதைத் தடுத்துவிடலாம். பணம் தருவோரும் இனிமேல் கொடுப்பதற்குப் பயப்படுவர். முற்றிலுமாக பணம் வரும் வழிகளைத் தடுத்து விட்டால் திமுகவின் வெற்றியைப் பெருமளவில் தடுத்துவிடலாம் என்று பாரதிய ஜனதா தலைமை கணக்குப் போட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இவ்வளவு அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது!’’ என்றார்கள்.

திமுக மாநில நிர்வாகி ஒருவரும் இதை ஒப்புக்கொண்டார். அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘அதிமுகவைப் பொருத்தவரை, சில மாதங்களுக்கு முன்பே, மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடாவுக்குத் தேவையான பணத்தை உரிய இடங்களில் சேர்த்து விட்டார்கள். சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் குறி வைத்து ஐ.டி.ரெய்டுகளை நடத்தி திமுகவுக்கு பணம் வரவிடாமல் தடுத்துவிட்டனர். தேர்தல் செலவுக்கும், வாக்காளர்களுக்குத் தரவும் பணம் எதுவுமில்லை என்பதுதான் தற்போதைய நிலைமை. திடீரென தேர்தல் தேதி அறிவித்ததே, திமுகவின் வெற்றிக்கு ஆப்பு வைப்பதற்குத்தான். ஆனால் நாங்கள் அதையும் கடந்து மக்கள் ஆதரவோடு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது!’’ என்றார்.

தேர்தல் ஆணையத்தின் ஆட்டம் இனிதான் ஆரம்பமாகப் போகிறது!

**–பாலசிங்கம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *