கோவை பாணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டப் பொறுப்பாளர் வீதம் பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறது திமுக.
கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் நடத்தினார் கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் திமுகவில் ஏற்கனவே விழுப்புரம் மத்தி, தெற்கு, வடக்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம்தான் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம். அரசு பிரித்த பின் திமுகவிலும் அது கள்ளக்குறிச்சி மாவட்டமானது.
இந்த மாவட்டத்தின் செயலாளர் அங்கயற்கண்ணி மீது ஒன்றிய செயலாளர்கள் பலரும் 8ஆம் தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் புகார்களை நேருவிடம் அடுக்கினார்கள். தலைமையிடம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார் கே. என்.நேரு. அதன் பின் அவர் கோவை மாவட்டத்துக்கு சென்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, அதன் விளைவாக கோவையிலும் மாவட்டங்கள் தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லையே என்று அம்மாவட்ட உடன்பிறப்புகள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு இன்று (ஆகஸ்டு 19) வந்திருக்கிறது.
**கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மாவட்டப் பொறுப்பாளராக தற்போதைய ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வும் தியாக துருகம் ஒன்றிய செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.**
**சங்கராபுரம், உளுந்தூர் பேட்டை ஆகிய இரு தொகுதிகளை உள்ளடக்கி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டு இதன் மாவட்டப் பொறுப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருக்கிறார்.**
இந்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பே வரவேண்டியது. ஆனால் முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவுக்கு வருவதை ஒட்டி சில நாட்கள் தாமதமாக வந்திருக்கிறது. இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற இந்த தலைமையின் அறிவிப்பு பற்றி கள்ளக்குறிச்சி திமுகவினரிடம் பேசினோம்.
“மாவட்டச் செயலாளர் அங்கயற்கண்ணி மீது ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோது 2018 ஆம் ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட கள ஆய்விலேயே கடுமையான புகார்களை கட்சியினர் தெரிவித்தனர். **இவ்வளவு புகார்கள் இருக்கும் நிலையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் இந்த இருக்கையில் அமர்ந்து என்ன பயன் என்ற ரீதியில் பேசினார் ஸ்டாலின்.** எனவே சீக்கிரம் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து வசந்தம் கார்த்திகேயனுக்கும், உதயசூரியனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். அங்கயற்கண்ணி மீது புகார்கள் சொன்னால், அவருக்கு பதிலாக அவரது நெருங்கிய உறவினர் உதயசூரியனுக்கு பதவி கொடுத்திருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக தலைமையில் இருந்து அழைத்து வசந்தம் கார்த்திகேயனிடம் மாவட்டப் பிரிப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்குத்தான் ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கொடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் பரவ, பொன்முடி தரப்பில் சில அழுத்தங்கள் தலைமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்தே மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து இரு பொறுப்பாளர்களும் பொறுப்புக் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். **தேர்தலுக்காகத்தான் இந்த ஏற்பாடு என்றும் தேர்தல் முடிந்ததும் மீண்டும் திமுகவில் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் தலைமையில் பேசிக் கொள்கிறார்கள்”** என்கிறார்கள்.
கோவையில் இரு தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்ற வரையறையை அடுத்து கள்ளக்குறிச்சியிலும் இதே ஸ்கேலை பின்பற்றி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதை திமுகவில் வரவேற்கவும் செய்கிறார்கள்.
திமுக தலைமைக் கழக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் நாமக்கல் நக்கீரன் இதுகுறித்துக் கூறும்போது, “**திராவிட முன்னேற்றக் கழகத்தில் கழகத் தலைவர் எடுத்திருக்கும் இரண்டு தொகுதிகள் கொண்டது ஒரு மாவட்ட கழகம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது, மிகவும் அபூர்வமானது, மாவட்டச் செயலாளர்கள் என்ற சிற்றரசர்களின் ஆதிக்கம் குறையும், இன்னும் அதிகப்படியான நிர்வாகிகள் கழகத்தை வழி நடத்தலாம், தமிழகம் முழுக்கவே இந்தப் புரட்சிகர திட்டத்தை தலைமைக்கழகம் அமல்படுத்த வேண்டும்** என கழக நலன் கருதி கேட்டுக் கொள்ளுகின்றேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதன்படி பார்த்தால் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மொத்தமுள்ள 234 தொகுதிகளும் 117 மாவட்டங்களாக திமுக பிரிக்கப்படுமா என்ற கேள்வி திமுகவில் பரவலாக எழுந்துவருகிறது.
**-ஆரா**
�,”