திமுக தலைமையில் வரும் 27ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா படிப்படியாக குறையும் அதே சமயம், பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. விடுபட்ட மரணங்கள் எண்ணிக்கையில் கூடுதலாக 444 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்காத தமிழக அரசு, கொரோனா தொற்று, உயிரிழப்புகளை குறைத்துக் காட்ட முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் திமுக தலைமைக் கழகம் இன்று (ஜூலை 24) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அனைத்து கட்சிக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும். அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், இது மருத்துவம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அரசியல் தலைவர்களின் ஆலோசனை தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிலிருந்து திமுக தலைமையிலான கூட்டணி தலைவர்கள் மட்டும் ஆலோசனை செய்து வருகின்றனர்.
கேரளாவில் தற்போது அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இதுபோல தமிழகத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளன.
**எழில்**�,