மார்ச் 7 ஆம் தேதி பின்னிரவு திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தனது 98 ஆவது வயதில் காலமானார். இதையொட்டி திமுக தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரித்துவருகிறது.
43 வருடங்களாக தொடர்ந்து பொதுச் செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகனின் இடத்தில் அடுத்து யார் என்ற கேள்வி பல்வேறு நிர்வாகிகளுக்கும் மனதளவில் எழுந்தாலும், கட்சி ஒருவார கால துக்கம் அறிவித்திருப்பதால் மேல்மட்ட நிர்வாகிகள் வெளிப்படையாக யாரும் விவாதிக்கவில்லை. ஆனாலும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடைய ஆதரவாளர்கள், அவர்களது அபிமானிகள் ஆகியோர் சமூக தளங்களில் அடுத்த பொதுச் செயலாளர் இவர்தான், அவர்தான் என்ற விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் பரவலாக செய்யப்படும் கருத்துருவாக்கங்களில் முக்கியமானது, “தற்போது பொருளாளர் பதவி வகிக்கும் துரைமுருகன் தான் கட்சியில் தற்போதைக்கு சீனியர் தலைவராக இருந்தாலும் பொதுச் செயலாளர் பதவிக்கு துடிப்பான ஒருவரை கொண்டுவர தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார். அந்த அடிப்படையில் தற்போது கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் ஆ.ராசா பொதுச் செயலாளராக வாய்ப்பிருக்கிறது” என்பதுதான்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற தளங்களில் இந்த கருத்து அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஆ.ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூர், அவர் எம்பியாக இருக்கும் நீலகிரி மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் இருக்கும் ராசாவின் ஆதரவாளர்கள் அபிமானிகள் , அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தகவலை அதிக அளவில் பரிமாறி வருகிறார்கள்.
அதுவும் குறிப்பாக தமிழக பாஜகவின் தலைவராக தேசிய எஸ்.சி,.எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவரான முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, ‘சனாதன சிந்தனைகளை வலியுறுத்தும் பாஜகவே மாநிலத் தலைவராக தலித்தை நியமிக்கும்போது சமூக நீதிக்காகவே தொடர்ந்து போராடும் திமுகவில் நிச்சயம் ஆ.ராசாதான் பொதுச் செயலாளராக நியமிக்கப்படப் போகிறார்” என்ற வாதங்கள் அதிகமாக முன் வைக்கப்பட்டு வருகின்றன.
திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் மத்தியிலும், ‘என்னப்பா அடுத்த பொதுச் செயலாளர் ராசாவாமே?’ என்ற கேள்வி பரஸ்பரம் கேட்கப்பட்டு வரும் நிலையில் தலைமைக் கழகத்தில் இது தொடர்பாக விசாரித்தோம்.
“திமுக பொதுச் செயலாளர் மறைந்து ஒருவாரத்துக்கு கழகக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இடையில் சட்டமன்றம், ராஜ்யசபா மனு தாக்கல் நிகழ்வு ஆகியவை தவிர்க்க முடியாததால் தலைவர் கலந்துகொண்டார். மற்றபடி அவரது முழு கவனமும் வரும் மார்ச் 14 ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெறும் பேராசிரியர் உருவப் படத் திறப்பு நிகழ்ச்சி, நினைவேந்தல் நிகழ்ச்சி பற்றிய திட்டமிடலில்தான் இருக்கிறது. தனக்கு நெருக்கமான சிலரிடம் கூட அவர் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது பற்றியான எவ்விதக் கருத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை. பேராசிரியரின் இழப்பு அவரை இன்னமும் வாட்டிக் கொண்டிருக்கிறது. எனவே அவரது இடத்தில் அடுத்து யார் என்ற சிந்தனையே இப்போது ஸ்டாலினிடம் இல்லை” என்கிறார்கள்.
இந்த நிலையில், தன்னை சமூக தளங்களில் அடுத்த பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து சித்திரித்து வரும் விவாதங்கள் பற்றி ஆ.ராசா என்ன நினைக்கிறார்? என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் மின்னம்பலத்தின் சார்பில் பேசினோம்.
“இந்த சித்திரிப்புகளுக்கும் ராசாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவருக்கு இப்படிப்பட்ட ஒரு எண்ணமே கிடையாது. ஒரு காலத்தில் வைகோவை இப்படித்தான் அச்சு ஊடகங்கள் திமுகவின் உச்சத்துக்கு செல்வார் என்று முன்னிறுத்தினார்கள். அதன் பின் காலப் போக்கில் கட்சியில் வைகோவின் நிலைமை என்ன ஆனது என்பது எல்லாருக்கும் தெரியும். இதெல்லாம் ராசாவுக்கும் நன்கு தெரியும்.
இப்போதைக்கு ராசாவுக்கு கட்சியின் உச்சப் பதவிகள் பற்றிய எந்த நினைப்பும் திட்டமிடலும் இல்லை. தற்போது ராசாவுக்கு 56 வயதாகிறது. கட்சியில் தன்னை விட பல சீனியர்கள் இருக்கிறார்கள். அதனால் இன்னும் சில வருடங்கள் கழித்து சீனியாரிட்டி அடிப்படையில் தனக்கான வாய்ப்பை கட்சி வழங்கும்போது பெற்றுக் கொள்ளலாம் என்பதே அவரது சிந்தனை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராசா தன்னை ஒரு சிறந்த நாடாளுமன்ற வாதியாக செதுக்கிக் கொள்ளும் பணிகளையும், மக்கள் பணிகளையுமே இப்போது முக்கியமானதாகக் கருதுகிறார். தன்னை இந்திய அளவிலான சிறந்த பெரியாரிஸ்டாக முன்னிறுத்திக் கொள்வதே ராசாவின் இப்போதைய முழுமுதல் முனைப்பாக இருக்கிறது.
1996 இல் ஆ.ராசாவை கலைஞர் முதல் முறையாக எம்பி ஆக்கினார். பின் மாவட்டச் செயலாளர் ஆக்கினார். அதன் பின் தலித் கோட்டாவில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராசாவுக்கு கொடுக்க கலைஞரே விரும்பி ராசாவிடம் கேட்டார். ஆனால் ராசா அப்போது மறுத்துவிட்டார். இந்நிலையில் இப்போது பொதுச் செயலாளர் பதவிக்கு ஆ.ராசா என்று அவர் மீதிருக்கும் அன்பிலும் பற்றிலும் அவரது ஆதரவாளர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் ராசாவின் மனதில் அப்படி ஒரு எந்த சிந்தனையும் இல்லை” என்கிறார்கள்.
அப்படியென்றால் யார்தான் திமுகவின் பொதுச் செயலாளர் என்று தலைமைக் கழக வட்டாரத்தில் விசாரித்தபோது,
”கட்சித் தலைவரான ஸ்டாலின் நிர்வாகத்தில் சீனியாரிட்டிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு இப்போது முதல் ஆளாக இருப்பவர் துரைமுருகன் தான். வன்னிய சமுதாயம் என்னும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர், கலைஞருடன் ஆரம்ப காலத்தில் இருந்தே பயணித்தவர். அதனால் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தான் என்பதே தற்போதைய நிலைமை.
அப்படியென்றால் துரைமுருகன் வகித்த பொருளாளர் பதவிக்கு யார் என்ற கேள்வியும் அடுத்து எழுகிறது. இப்பதவியை அடைய திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவுக்கு ஆசைகள் இருந்தாலும் அவர் கட்சியில் ஜூனியர். அதையும் தாண்டி அவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். எனவே வேலு என்னதான் தான் நினைப்பதை நடத்திக் காட்டுபவராக இருந்தாலும், ஸ்டாலின் தலைமைக் கழக பொருளாளர் பதவிக்கு வேலுவை நியமிப்பாரா என்பது சந்தேகம்தான்.
அதனால் சீனியாரிட்டிப்படி இப்போது பொருளாளர் பதவிக்கு முன்னணியில் இருப்பது டி.ஆர்.பாலுதான். அண்மையில் கலைஞர் மறைவுக்குப் பின் திமுக பொருளாளராக துரைமுருகன் பதவியேற்றார். அதன்பின் அவர் வகித்து வந்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பொறுப்பை பாலுவுக்கு கொடுத்தார் ஸ்டாலின். அப்போது கூட பாலு தனக்கு அப்பதவி வேண்டாம் என்றார். ஆனால், ‘கட்சியினர் அனுப்பும் புகார்களை பொறுமையாக படித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இப்பதவிக்கு நீங்கள் அவசியம்’ என்று சொல்லி பாலுவை நியமித்தார் ஸ்டாலின்.
ஆனால் சில வாரங்களுக்கு முன் நேருவை முதன்மைச் செயலாளர் ஆக்கும் சூழல் வந்தபோது நேருவோடு சேர்ந்து பாலுவையும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். ஆனால் இது தன்னை டிகிரேட் செய்வது மாதிரி இருப்பதாகக் கூறி அதை பாலு மறுத்துவிட்டார். இதில் பாலுவுக்கு நிறைய வருத்தங்களும் இருக்கின்றன. இந்த நிலையில்தான் சீனியாரிட்டிப்படி பொருளாளர் பதவி பாலுவுக்கு போகவே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. என்றாலும் கட்சியின் நிர்வாக காலியிடங்களை நிரப்புவது பற்றிய பேச்செல்லாம் மார்ச் 14 ஆம் தேதிக்குப் பிறகுதான் தொடங்கும்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
**-வேந்தன்**
�,”