அடுத்த பொதுச் செயலாளர் யார்: கூடும் திமுக பொதுக் குழு!

Published On:

| By Balaji

பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி கூடுகிறது.

திமுக பொதுச் செயலாளராக 43 வருடங்கள் இருந்த பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவால் மார்ச் 7ஆம் தேதி காலமானார். இதன் காரணமாக திமுக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்பட்டு, அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டன. பேராசிரியர் மறைவுக்குப் பிறகான சில நாட்கள் கழித்து புதிய பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி திமுக வட்டாரங்களிலும், அரசியல் மட்டத்திலும் எழுந்தது.

இதுதொடர்பாக [திமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா ஆ.ராசா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/12/69/dmk-next-general-seceratary-likely-to-be-raja) என்ற தலைப்பில், பொதுச் செயலாளர் பதவி தற்போதைய பொருளாளர் துரைமுருகனுக்கு கிடைக்குமா? அல்லது ஆ.ராசாவுக்கு கிடைக்குமா? ஒருவேளை துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்தால் அடுத்த பொருளாளர் யார் என்ற தலைப்பில் விரிவான தகவல்களுடன் செய்தி வெளியிட்டோம்.

பேராசிரியர் மறைவுக்கு அண்ணா அறிவாலயத்தில் நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், திமுகவின் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பேராசிரியருக்காக அனுசரிக்கப்பட்டுவந்த ஒருவார கால துக்கம் நேற்றுடன் முடிந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 15) வெளியிட்ட அறிவிப்பில், “திமுக பொதுக் குழு கூட்டம் மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அதுபோது பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்வுக்காக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மார்ச் 29ஆம் தேதி புதிய பொதுச் செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தெரியவரும்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share