Wதிமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

Published On:

| By Balaji

நாளை நடைபெற இருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதுபற்றி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கடந்த 22ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 29ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் எனவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி சிறுநீரகப் பிரச்சினையால் நேற்று காலமானார். அடுத்த சோகமாக குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயனும் இதய நோயால் இன்று காலை உயிரிழந்தார்.

அடுத்தடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உயிரிழப்பு அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்ட அறிவிப்பில், “ஸ்டாலின் தலைமையில் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**த.எழிலரசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share