aஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இடைக்கால ஜாமீன் அவகாசம் இன்று (ஜூன் 1) முடிந்த நிலையில், சென்னை எழும்பூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரணடைந்தார்.
பின்னர் ஜாமீன் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஆர்.எஸ்.பாரதி, காவல்துறை மற்றும் புகார்தாரர் கல்யாண சுந்தரம் தரப்பு என அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இறுதியாக ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “என்னை கைது செய்வதில் ஈடுபாடு காட்டுவதை விடுத்து கொரோனாவை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
**எழில்**�,