cதிமுக எம்பி ஜாமீன் மனு தள்ளுபடி: ஏன்?

Published On:

| By Balaji

முந்திரி ஆலைத் தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் திமுக எம்பியின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடலூர் திமுக மக்களவை உறுப்பினரான ரமேஷ் தனது முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜ் என்பவரை கம்பெனியின் நிர்வாகிகளோடு சேர்ந்து அடித்துக் கொன்றதாக கொலைப்புகார் எழுந்தது. கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி இதுகுறித்துப் புகார் அளித்தார்.

பாமகவும் இதில் களமிறங்கி கோவிந்தராஜ் மரணத்தில் நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தைத் தட்டியது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோவிந்தராஜின் உடல் விழுப்புரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஜிப்மர் மருத்துவர்களால் நடத்தப்பட்டது. கூட்டாக தாக்கியதாகவும் பின் மண்டை கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலும் விசாரணையின் அடிப்படையிலும் எம்பி ரமேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். ஐந்து பேரை கைது செய்தனர். இந்நிலையில் எம்பி ரமேஷ் அக்டோபர் 11 ஆம் தேதி பண்ருட்டி ஜே எம். 1 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

‘என் மீதான வழக்கு திமுக தலைமையிலான நல்லாட்சியின் மீது விமர்சனம் வைக்கப்படும் வகையில் இருப்பதால் சட்டப்படி என்னை குற்றமற்றவனாக நிரூபித்து விட்டு வெளியேவருவேன்’என்று சரணடைவதற்கு முன் எம்பி ரமேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 13 ஆம் தேதி சிபிசிஐடி அவரை ஒரு நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தின் தொடக்கம் முதலே முக்கியமான புலனாய்வு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் மின்னம்பலம். காமில் ரமேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில்கொடுத்த வாக்குமூலம் பற்றி [போலீஸ் கஸ்டடியில் ரமேஷ் எம்பி கொடுத்த வாக்குமூலம்](https://minnambalam.com/politics/2021/10/16/16/dmk-mp-ramesh-gave-statement-to-police-cbicid-custody) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

கஸ்டடி விசாரணையை அடுத்து அக்டோபர் 27ஆம் தேதி வரை ரமேஷ் நீதிமன்றக் காவலில் கடலூர் கிளைச் சிறையில் இருக்கும் நிலையில், ஜாமீன் கேட்டு மாவட்டக் கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரமேஷ். திமுக கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளரான வழக்கறிஞர் சிவராஜ் தான் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனு நேற்று (அக்டோபர் 23) மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐசிடி தரப்பில், “ரமேஷ் மீது தொடுக்கப்பட்ட கொலை வழக்கில் முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இந்த நிலையில் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று சிபிசிஐடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்ட வட்டாரங்களில் விசாரித்தபோது, “பொதுவாகவே கொலை வழக்குகளில் மாவட்ட நீதிமன்றங்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜாமீன் தருவதில்லை. இங்கே ஜாமீன் மனு போட்டு அது நிராகரிக்கப்பட்டு அதன் பின் அடுத்த ஸ்டெப்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதுதான் சட்ட ரீதியான நடைமுறை. அந்த அடிப்படையில் சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ரமேஷ் இனி உயர் நீதிமன்றத்தை நாடுவார்” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share