�காலையில் சேர்ந்து மாலையில் வேட்பாளரான திமுக எம்.எல்.ஏ: போராட்டத்தில் மதுரை பாஜக

Published On:

| By Balaji

திமுகவில் சீட் கிடைக்காத காரணத்தால், பாஜகவில் இன்று (மார்ச் 14)காலையில் இணைந்து மதியம் பாஜக தேசிய தலைமை வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் திருப்பரங்குறம் திமுக எம்.எல்.ஏ.வான சரவணன்.

இந்த நிலையில் அவருக்கு பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்பதை யூகித்து காலையிலேயே போராட்டத்தில் இறங்கினர் மதுரை பாஜகவினர்.

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் மதுரை சீனிவாசன் போட்டியிடுவார் என கருதப்பட்டது. அவரும் கட்சி அலுவலகம் திறந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் டாக்டர் சரவணன் பெயர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து பா.ஜனதாவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இன்று இறங்கினர். மதுரை புதூரில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள், கட்சியில் சேர்ந்த அரை நாளிலேயே, அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது. நீண்ட நாள் உழைத்த சீனிவாசனுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பா.ஜனதாவின் இந்த திடீர் போராட்டம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சியில் இன்று புதிதாக சேர்ந்த திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ வான டாக்டர் சரவணன் .

இவர் முதலில் மதிமுக,தேமுதிக,பாஜக,திமுகவில் சேர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனார். மீண்டும் திமுகவில் வாய்ப்பு கேட்டு பலமாக காய் நகர்த்திய எம்.எல்.ஏ, சரவணன், இப்போது திருப்பரங்குன்றம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மீண்டும் பாஜக வில் இன்றே இணைந்து இன்றே சீட் வாங்கிவிட்டார்.

பாஜக மதுரை பொதுச் செயலாளர் சீனிவாசன் கட்சியில் முக்கியமானவர், மாநில தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆனால் நீண்ட நாட்களாக படிப்படியாக உழைத்து மாநிலப் பொதுச் செயலாளரானவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை, ஒரே நாளில் தட்டிப் பறித்த சரவணன் எம்.எல்.ஏ.மீது பாஜகவினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

**-சக்தி பரமசிவன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share