அதிமுக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம்: துரைமுருகன்

Published On:

| By admin

கதவணை கட்டுவதற்காக அதிமுக வாங்கிய கடனுக்கு மாதம் 14 கோடி ரூபாய் நாங்கள் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நீர்வளத் துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார். அப்போது 5 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழகத்தில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது எனது எண்ணம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் கதவணை கட்டுவதை ஏன் விட்டு விட்டீர்கள் என்று கேட்கிறீர்கள். நாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறோம். இதில் பாதி நாட்கள் கொரோனா பதிப்பிலும் பாதி நாட்கள் மழை வெள்ளத்தாலும் போய்விட்டது.

அதிமுக ஆட்சியில் கதவணை கட்டினீர்கள். இல்லை என்று நான் சொல்லவில்லை. நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை கட்டினீர்கள். 993 கோடி ரூபாயில் கீழ்பவானி வாய்க்காலில் கதவணை கட்டினீர்கள். காவிரி பகுதியில் 3380 கோடி ரூபாய் மதிப்பில் கட்டினீர்கள். கடன் வாங்கி இதையெல்லாம் செய்தீர்கள்.

கடன் வாங்கலாம் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் நபார்டு வங்கியில் என்டிஏ என்ற ஒரு பிரிவு உள்ளது. இதில் வட்டிக்கு வட்டி என மீட்டருக்கு மேல் வட்டி வசூலிக்கப்படும்.
இவர்களிடம் 7.85 சதவிகித வட்டிக்குக் கடன் வாங்கி கதவணை கட்டினீர்கள். இவற்றையெல்லாம் கூட்டிப் பார்த்தால் 4,323 கோடி ரூபாய் ஆகிறது.

இதற்கு மாதா மாதம் நாங்கள் 14 கோடி ரூபாய் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வாங்கி வைத்துப் போனதற்கு நாங்கள் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே இதை விடக் குறைந்த வட்டியில் யாராவது கடன் கொடுத்தார்கள் என்றால், உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றித் தரப்படும்” என்றார்.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில் மாநில உரிமை நிலைநாட்டப்படும் என்று தெரிவித்த அவர் நீர்நிலைகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

மேலும் அவர், நான் கோபாலபுர குடும்பத்தின் விசுவாசி. இங்கே அமர்ந்திருக்கக் கூடியது ஸ்டாலின் அல்ல. கலைஞரின் முகமாகத்தான் பார்க்கிறேன்” எனவும் கூறினார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share