yபாஜகவின் கிளை கழகம்தான் அதிமுக: மு.க.ஸ்டாலின்

Published On:

| By Balaji

பாரதிய ஜனதாவின் கிளைக் கழகமாக அ.தி.மு.க. செயல்படுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதுமே திமுக கூட்டணிதான் வெற்றிபெற்றுள்ளது. இது, வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத வரலாறு. அந்த வரலாறு தொடர வேண்டும். கழக ஆட்சியில் கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோது குமரிக்கு எத்தனையோ சாதனைகளை படைத்திருக்கிறார். நான் தேர்தலுக்கு மட்டும் வந்துபோகிறேன் என நினைத்துவிடக்கூடாது.

எந்த சூழ்நிலையிலும் மக்களோடு நாங்கள் இருக்கிறோம். கலைஞரின் சாதனைகளை தலைப்புச் செய்தியாக நினைவுபடுத்த விரும்புகிறேன். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை, காமராஜருக்கு மணிமண்டபம், ஜீவாவுக்கு மணிமண்டபம், பொய்கை,, குளச்சல் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகங்கள், பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் எல்லாம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆகும்.

14 வயதில் சாதாரண உறுப்பினராக தி.மு.கவில் இணைத்துக்கொண்டு கோபாலபுரத்தில் வட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகர உறுப்பினராக, பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞரணி தலைவராக, பொருளாளராக, செயல் தலைவராக, கலைஞர் மறைவிற்குப் பிறகு தலைவராக வந்திருக்கிறேன். சென்னையில் இரண்டுமுறை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சராக, இப்ப எதிர்கட்சி தலைவராக உள்ளேன்.

இந்த மாவட்டத்தில் போட்டியிடும் நம் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்கும் நானும் ஒரு வேட்பாளர்தான். நான் முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றிபெற்றால்தான் நான் முதலமைச்சர் ஆக முடியும். ஆட்சி நடத்தும் பழனிசாமி பத்து வருடமாக நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்று நினைத்து விட்டு நம்மைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.

பத்து வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்களே என்ன செய்தீர்கள் என நம்மிடம் கேட்கிறார். நான் கேட்கிறேன் பத்து வரு‌ஷமா நீங்க என்ன செய்தீர்கள். நான் பொத்தாம் பொதுவாக கேட்கமாட்டேன், நான் கலைஞரின் மகன்.

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் 4000 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு போட்டார். இதை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தெம்பிருந்தால், துணிவிருந்தால், திராணி இருந்தால் அந்த வழக்கை சந்தித்திருக்க வேண்டும். அப்படிச் சந்தித்திருந்தால் இப்பொழுது சிறையில்தான் இருந்திருக்க வேண்டும். முதல்வராக இருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் போய் தடை வாங்கினார். ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. வந்த பிறகு உள்ளேதான் இருக்கப் போகிறார்.

ராமலிங்கம் வீட்டில் ரெய்டு நடத்திய பிறகுதான் மோடி அரசின் பாதம் தாங்கிய பழனிசாமியாக மாறிவிட்டார். பாஜகவின் கிளை கழகமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. உறவினர்கள் சொத்து குவித்து வைத்துள்ளது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும், ஆளுநரிடத்தில் புகாரும் கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கமாட்டார் என தெரியும் ஆனால் முறைப்படி கொடுத்தோம்.

மே 2 வாக்கு எண்ணிய மறுநாள் நாம் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். நமக்கென்று இருக்கும் உரிமைகள் மோடி இடத்தில் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா 2016 ஜூன் 16-ல் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் மிகத்தெளிவாக ஜி.எஸ்.டி சட்டத்தை ஆதரிக்க முடியாது, உதய் திட்டத்தையும், நீட் தேர்வையும், உணவு பாதுகாப்பு சட்டத்தையும் ஆதரிக்க முடியாது என்றார். செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்புறம் என்ன நடந்தது என உங்களுக்குத் தெரியும். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெயருக்கு விசாரணை நடத்திகொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஜெ மரணம் குறித்துக் கண்டுபிடிக்கப்படும்.

இப்போது சிறுபான்மை மக்களுக்கு வக்காலத்து வாங்குவதுபோல நாடகம் ஆடுகிறார். காஷ்மீர், முத்தலாக், குடியுரிமை திருத்த சட்டம் என எல்லாவற்றுக்கும் ஆதரவு கொடுத்தார்கள். ஒரு அ.தி.மு.க. எம்.பி ஜெயித்தாலும் அது பி.ஜே.பி. எம்.பிதான். அ.தி.மு.க.வும் பிஜேபியும் ஜெயிக்கக்கூடாது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கோடி கையெழுத்து வாங்கி அனுப்பிவைத்தோம். இப்போது குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என மக்களை ஏமாற்றுகிறார்கள். கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகியும் நாம்தான்” என்றார்.

மேலும், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்திலும் நுழையும் அபாயம் உள்ளது. உயிருக்கு ஆபத்து என நாங்கள் எச்சரித்தோம். அம்மா ஆட்சியில் கொரோனா வராது, ஒரு உயிர்கூட போகாது என்றார்கள். துரைமுருகன் மாஸ்க் கேட்டார். கிடையாது என்ற பழனிசாமி மறுநாள் மாஸ்க் அணிந்து வந்தார்.

கொரோனா நிதியாக மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னோம். ஆனால் ரூ.1000 ரூபாய் கொடுத்தார்கள். நாங்கள் மே 2ஆம் தேதி வருவோம், ஜூன் 3 தலைவர் பிறந்த நாள் அன்று மீதமுள்ள ரூ.4000 ரூபாய் வழங்கப்படும்.

குமரியில் அய்யா வைகுண்ட சாமி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்கப்படாது. கன்னியாகுமரி சரக்கு பெட்டக துறைமுகத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தி.மு.க. இந்த திட்டத்தை வர விடாது, நெய்யாறு இடதுகரை சானல் தூர்வாரப்படும். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

தமிழகத்தை டெல்லியில் உள்ளவர்கள்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடவில்லை. மதவெறியை தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறார்கள்.

இது திராவிட மண். தமிழகத்தில் அவர்கள் நுழைய முடியாது. மாநில உரிமைகளைப் பாதுகாக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்கிட, குமரி முனையை முழுமையான குமரியாக மாற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவரது இடத்தை நிரப்ப அவரது மகன் விஜய் வசந்த் வந்திருக்கிறார். அவருக்கு கைச்சின்னத்தில் வாக்களியுங்கள். கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்கிறேன். மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார் மு.க.ஸ்டாலின் .

**-சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share