நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வார்டு வார்டாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரிக்க செல்லும்போது, கூட்டத்திற்காக பணம் கொடுத்து ஆண்கள், பெண்களை அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக நிர்வாகிகள், பெண்களை தேடித் தேடி திரட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்றால் பெண்கள் கூட்டம் அதிமுகவுக்குதான் அதிகமாக இருக்கும். திமுகவிற்கு பெண்கள் கூட்டம் மிக மிகக் குறைவாகதான் இருக்கும். தேர்தலின்போது பெறும் வாக்குகளும் அப்படித்தான் இருக்கும்.
தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக, பெண் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. அதனால்தான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அதிகளவு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், ஆன்லைனில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது மகனும் இளைஞர் அணி செயலாளருமான எம்எல்ஏ உதயநிதி கரூரில் துவங்கி திருச்சி, தஞ்சை, கடலூர் என நேரடியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.
அப்பாவின் ஆன்லைன் பிரச்சாரத்திற்கும், மகனின் நேரடியான பிரச்சாரத்திற்கும் ஆண்கள் கூட்டத்தைவிட பெண்களைதான் அதிகளவில் அழைத்துவர வேண்டும் என்று முதல்வர் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.
அதனால்தான் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் பிரச்சாரத்திற்கு அதிகளவில் பெண்களை அழைத்து வந்து நிறுத்துகிறார்களாம். இதன்விளைவாகத்தான், தற்போது திமுக பிரச்சாரத்தில் பெண்களை அதிகளவில் காணமுடிகிறது. கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு கட்டணமும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் உடன் பிறப்புகள்.
**வணங்காமுடி**