டிஜிட்டல் திண்ணை: தொகுதிக்கு ஐந்து பேர்: ஐபேக் கொடுத்த திமுக லிஸ்ட்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் ஊரடங்கு நிலையிலும் தனது வேலைகளை ஓயாமல் செய்துகொண்டிருக்கிறது. ஐபேக் டீம்தான் வேட்பாளர்களை முடிவு செய்யப் போகிறது என்ற தகவல் ஆரம்பத்தில் பேசப்பட்டு அப்போது மாவட்டச் செயலாளர்கள் தங்கள் அதிகாரம் குறைக்கப்படுகிறதா என்று அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்டாலினிடமே சிலர் முறையிடவும் செய்தார்கள். ஆனால் பிப்ரவரி 17 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, ‘திமுகவில் மாசெக்களின் மரியாதை என்றும் குறையாது’ என்று பதிலளித்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் காணொலிக் கூட்டத்தில் ஐபேக் டீம் மாசெக்களுக்கு மரியாதை தரவில்லை என்று மறைந்த சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் கடுமையான குரலில் பேசினார். இது திமுகவுக்குள் பரபரப்பானது,.

இந்நிலையில் ஐபேக் தன் அடுத்த கட்ட நகர்வை எட்டியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதியில் இருந்து ஒன்றிணைவோம் வா திட்டத்தை திமுக மாசெக்கள், திமுக ஐடி விங் ஆகியோரோடு சேர்ந்து ஒருங்கிணைத்து நடத்தினர் ஐபேக் டீமினர். இந்த மூன்று மாதத்துக்குள் இந்தத் திட்டத்தில் யார் யார் ஆக்டிவ்வாக செயல்படுகிறார்கள், பொதுமக்களோடு யார் அதிக பிணைப்பில் இருக்கிறார்கள், கட்சித் தலைமைக்கு யார் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பன போன்ற முக்கியமான பாயின்ட்டுகளை ஒன்றிய அளவில் சேகரித்துவிட்டனர் ஐபேக் குழுவினர். ஒன்றிணைவோம் வா திட்டம் ஒருபக்கம் என்றால், இந்தத் திட்டத்தை வைத்தே திமுக மாசெக்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரியாமல் தமிழகம் முழுதும் கள ஆய்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது ஐபேக் டீம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே தாங்கள் பழகி வரும் நேர்மையான ஊடகத் துறையினர் சமூக ஆர்வலர்களிடம் உரையாடி ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மையான சாதி, தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னான சாதி அடர்த்தியின் நிலை, தற்போதைய நிலையில் மாவட்டத்தின் முக்கிய திமுக பிரமுகர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் அவர்களுக்கான பின்பலம் போன்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சேகரித்து வைத்திருந்தது ஐபேக். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்ட ஐபேக் டீம் மூலம் மாவட்ட திமுகவை புலனாய்வு செய்து ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறார்கள். இந்த இரு ஆய்வுகள் மூலமும் இப்போது தொகுதிக்கு ஐந்து பேர் கொண்ட பட்டியல் புதிதாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து பேர் பட்டியல் ஐபேக் தலைமை மூலமாக திமுக தலைமையிடம் ஒரு சில நாட்கள் முன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்குமான பட்டியலை தயாரிப்பதற்கு முன் அதிபட்சம் ஆறு மணி நேரம் ஐபேக் குழுவினருக்குள் ஆலோசனை நடந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அதன் முடிவில் அந்த ஐந்து பேரில் மூன்று பேர்களைதான் ஐபேக் வேட்பாளர்கள் என்ற நிலைக்கு பரிந்துரைக்கும். அவர்கள்தான் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்கப் போகிறவர்கள்.

ஐபேக் தயாரித்த இந்த கேள்விப்பட்டியலில் பல கேள்விகள் இருக்கின்றன. எப்போது முதல் கட்சியில் இருக்கிறார், அவர் சாதி என்ன, அந்த சாதியின் தொகுதி நிலை என்ன, மக்களிடம் அவருக்கு நற்பெயர் எப்படி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்திருக்கிறாரா, இருந்தபோது மக்களுடன் அவருக்கான உறவு எப்படி, அவர் மீதான குற்ற வழக்குகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு உண்மையான, நேர்மையான, வெளிப்படையான பதில்கள் பதிவு செய்யப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஐந்து பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி மாவட்டச் செயலாளர்களுக்கு இதுவரை எதுவும் தெரியவில்லை என்பதே உண்மை. ஓரிரு நாட்களாக இந்த பட்டியல் ஸ்டாலின் கைக்கு சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது. மிகவும் துல்லியமாக எந்த சார்புமின்றி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஐபேக் மூவ் அறிந்த சிற்சில திமுகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share