பெட்ரோல் டீசல், பால் விலை குறைக்கப்படும்: திமுக வாக்குறுதி!

politics

கொரானாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது. ரயில்வே தனியார் மயம் ஆவதைக் கைவிட வலியுறுத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,

109 வழித் தடங்களில் ஏறத்தாழ 151 விரைவு ரயில்களை 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தனியார் / பன்னாட்டு நிறுவனங்கள் 2023 முதல் இயக்கிட ஒப்புதல் தந்து, ரயில்வேயைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தி.மு.க. அரசு வலியுறுத்தும்.

ஏழை எளிய மக்கள் வசதியுடன் பயணித்து வரும் ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டம் அதிக அளவு ஏழைகள் வாழும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் குந்தகத்தை விளைவிக்கும். எனவே மத்திய அரசு ரயில்வே நிர்வாகத்தைத் தனியார் மயம் ஆக்கும் நடவடிக்கைகளைத் தி.மு.க அரசு தொடர்ந்து எதிர்க்கும், ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தும்.

**வங்கித் துறையைத் தனியாருக்கு விற்கும் முயற்சியைக் கைவிடுக**

489.இந்தியாவில் மிகப் பெரிய அளவில் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி அடைந்திடவும், தொழில்முனைவோர், வணிகர்கள், மாணவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் பொருளாதார அடிப்படையில் மேம்பாடடையவும், ஒரு சிலருடைய ஆதிக்கத்தில் இருந்த வங்கித் துறையை அரசுடைமையாக்கி அதன் மூலம் அனைத்து மக்களும் பயனடையச் செய்தது காங்கிரஸ் அரசு.

ஆனால், இன்று அரசுடைமை ஆக்கப்பட்ட பல்வேறு வங்கிகளை மீண்டும் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி வருவது, மீண்டும் வங்கிகள் பொது மக்களுக்குப் பயன்படாமல் ஒருசில தனியாரின் நன்மைக்கே பயன்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடும் என்பதால் வங்கிகளைத் தனியாருக்கு விற்கும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை தி.மு.க அரசு வலியுறுத்தும்.

ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனியார் மயம் ஆக்கும் முயற்சியைக் கைவிடுக

490.இந்திய மக்களின் நம்பிக்கைக்குரியதும் இந்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பங்களிப்பை வழங்கி வருவதுமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் தனியார் மயம் ஆக்கப்படும் என இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய

அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்து ஆயுள் காப்பீட்டுக் கழகம் எப்போதும் போலச் செயல்பட அனுமதிக்குமாறு மத்திய அரசை தி.மு.க அரசு வலியுறுத்தும்.

**புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம்**

491. திட்டங்கள் செயலாக்க அமைச்சகம், எனும் பெயரில் ஒரு புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டு,மூத்த அமைச்சரின் பொறுப்பில் இயங்கும் இந்த அமைச்சகத்துக்குக் கீழ்க்கண்ட அலுவல்கள் பொறுப்பாக்கப்படும்:-

அ. மாநிலத் திட்டக் குழு இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும். மேலும், இந்தத் தேர்தல் அறிக்கையில் உள்ள கொள்கைகள், திட்டங்கள் வாக்குறுதிகள் மற்றும் செயல் அம்சங்கள் மீதான இலக்குகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதை இந்த அமைச்சகம் கண்காணித்து நிறைவேற்றும்.

ஆ. தேர்தல் நேரத்தில் பொது மக்களால் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை 100 நாட்களுக்குள் எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றுவதைக் கண்காணிக்கும்.

இ. அரசுப் பதவியேற்ற 100 வது நாளன்று, முதல்வர் அவர்கள் ஊடகவியலாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்பார்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் பணி நாளன்றும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை முதல்வர் மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து தலைவர் தளபதி அவர்களின் கலைஞர் அரசின் சாதனை அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்குவார்.

492.சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இயங்கி வரும்தி.மு.கழகம், ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளின்படி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மத நிறுவனங்களுக்கும் அவரவருக்குச்சொந்தமான இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசுப் பள்ளிகள் உட்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ் கட்டாயப் பாடம் என சட்டம்.

493.தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்பிப்பதில்லை. உலகின் பழைமையான மொழியாகத் திகழும் – 2000 ஆண்டுகளுக்கு மேலான செழுமை மிக்க இலக்கிய வளம் செறிந்துள்ள தமிழ் மொழி தமிழகப் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை என்பதை ஏற்க முடியாது. ஆகையால் தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட அனைத்திலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப் பட வேண்டும் என திமுக அரசு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தும்.

**7 பேர் விடுதலை**

494. ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் கழக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும்.

495தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்திட தமிழக அரசு மற்றும் தமிழக அரசு நிறுவனங்களில் 100 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசின் விதி கழக அரசால் முழுமையாக பின்பற்றப்படும்.

496.பல்கலைக் கழகங்கள் இல்லாத முக்கிய மாவட்ட தலைநகரங்களான காஞ்சிபுரம், ஈரோடு போன்ற முக்கிய இடங்களில் புதிய பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

497.70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு போக்குவாத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் வசதி அளிக்கப்படும். தமிழ்நாட்டிற்குள் மட்டுமே இந்த இலவசப் பயண வசதி தரப்படும்.

498.இந்திய குடியுரிமைத் திருத்த சட்டம் 2019ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் இலங்கையும் நான்காவது நாடாக சேர்த்திட மத்திய அரசு வலியுறுத்தப்படும்.

499.எண்ணூர் துறைமுகத்தில் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. இங்கிருந்து, பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள திருப்பெரும்புதூர் பகுதிக்குத் திரவ எரிவாயு எடுத்துச் செல்லப்பட்டு; அதனை எரிபொருளாகப் பயன்படுத்தி 2000 மெகாவாட் தூய்மை மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

500. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 ல் குறிபிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்து, இந்தியாவில் முகாம்களில் உள்ள நாடற்ற இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட மத்திய அரசு வலியுறுத்தப்படும்.

501.தமிழகம் முழுவதும் இலவசமாக நகர, உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும்.

502.கொரோனா பெருந்தொற்று நோயினால் இந்தியா உட்பட உலக நாடுகளின் மக்கள் எல்லாம்ஓராண்டு காலமாகப் பாதிக்கப்பட்டுச் சொல்லொணாத் தொல்லைகளுக்கு ஆளாகி லட்சக்கணக்கானோர் பலியாகிய கொடுமையின் தாக்கம் முற்றிலும் குறைந்தபாடில்லை. தமிழகத்திலும் கொரோனாவினால் அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் உட்பட கல்வி நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான சிறுதொழில்கள் அழிந்து, பெரும்பான்மை மக்கள் வேலை வாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்துள்ளனர். இந்தக் கொடுமையில் இருந்து மீள முடியாது தவிக்கும் தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கி ஆறுதல் அளிக்குமாறு பலமுறைஅ.தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் வைத்தும் ஏழை எளியோர் மீது அவர்களுக்கு இரக்கம் பிறந்திடவில்லை. ஆனால், கொரோனா நிவாரணத் தொகையாக பெயரளவுக்கு அ.தி.மு.க அரசு வெறும்

ரூ.1000/தான் வழங்கியது. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் திரும்பி உள்ள நிலையில்கட்டுப்பாடுகளும் மக்களின் துயரங்களும் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதையே கடமையாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் கழக ஆட்சி மலர்ந்ததும் அரிசிக் கார்டு குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த திருநாள் முதல் ரூ.4,000/-வழங்கப்படும்.

**சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்திட**

**ரூ.100 மானியம்**

503.ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் சுமையினைத் தரும் வகையில் மத்திய அரசுவீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அளவுக்கு அதிகமாகத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. சமையல் எரிவாயு மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்குமாறு மத்திய அரசைத் தி.மு.க. வலியுறுத்துவதோடு ஏழை, நடுத்தர வர்க்க மக்களுடைய சுமையினைக் குறைக்கும் வண்ணம் மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் (ஒரு சிலிண்டருக்கு மட்டும்) எரிவாயு மானியம் ரூ.100/- வழங்கப்படும்.

**பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்**

504.பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும் அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5/-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4/-ம் குறைக்கப்படும்.

**பால் விலை குறைப்பு**

505. அ.தி.மு.க அரசு 2019 ஆகஸ்ட் 19-ஆம் நாள் முதல் பால் விலையை 6 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை மக்கள் படும் துயரங்களை போக்கும் வகையிலும், ஏழைகுழந்தைகளுக்கும்பெண்களுக்கும் கட்டுப்படியான விலையில் பால் கிடைக்கும் வண்ணம் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.