துரைமுருகன் பெயரைச் சொல்லி… ஆலங்காயம் திமுக அட்டகாசம்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் இன்று அக்டோபர் 20ஆம் தேதி நடந்தது.
22 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்… பல்வேறு இடங்களிலும் பதவியேற்புக்கு கவுன்சிலர்களை தாய்க்கோழி தன் குஞ்சுகளை அழைத்து வருவதைப் போல பத்திரமாகவும் பதமாகவும் அழைத்துவந்து கூட்டிச் சென்று இருக்கிறார்கள் பல்வேறு திமுக பிரமுகர்கள்.
இந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி போலீஸ் தடியடி வரைக்கும் சென்றுள்ளது.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 கவுன்சிலர்கள். இவர்களில் திமுக சார்பில் 11 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். அதிமுக நான்கு கவுன்சிலர்கள், பாமக இரண்டு கவுன்சிலர்கள்,சுயேட்சையாக ஒரு கவுன்சிலர் என்ற வகையில் இங்கே வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே திமுகவின் 6 கவுன்சிலர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்கள் இன்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்து பதவி ஏற்றுக் கொண்டதும் மீண்டும் ஒற்றுமையாக சென்று தங்கள் வாகனத்தில் ஏறி கிளம்புவதற்குள் தான் திமுகவினரின் இரு பிரிவினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட திமுக வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசினோம்.
ஆலங்காயம் ஒன்றியம் தற்போதைய திமுகவின் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான தேவராஜின் சொந்த ஒன்றியம். தற்போதைய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர் தேவராஜி. முதல்நிலை ஒப்பந்ததாரராக இருந்த தேவராஜி மூலம் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்ற விஷயங்கள், இந்த மாவட்டம் தாண்டி பிற மாவட்ட திமுகவினருக்கும் நன்கு தெரியும்.
துரைமுருகனும் இவரும் நகமும் சதையுமாக இருந்த காலம் போய் இப்பொழுது இருவரும் எதிர் எதிர் முனையில் இருக்கும் அரசியல் சூழலில் தான் இந்த மோதல் நடந்திருக்கிறது.
ஆலங்காயம் ஒன்றியம் தனது சொந்த ஒன்றியம் என்பதால் தனது மருமகளான காயத்ரி பிரபாகரனை சேர்மனாக்க திட்டம் போட்டார் தேவராஜி. அதற்காகவே 18 கவுன்சில்களிலும் மிக தாராளமாக ஒரு கோடியிலிருந்து 2 கோடி வரை செலவழித்தார்.
ஆனால் திமுகவிலேயே துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி ஆகியோரின் ஆசியோடு சங்கீதா பாரி என்பவர் சேர்மன் பதவிக்கு குறி வைத்தார். சங்கீதாவின் கணவரான பாரி ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் எஸ்டேட் மற்றும் தோட்டங்களை மேற்பார்வையிட்டு வருபவர்.
தனது மனைவி சங்கீதாவை ஆலங்காயம் சேர்மனாக வேண்டுமென்று கதிர் ஆனந்திடம் வேண்டுகோள் வைக்க…. அதை நிறைவேற்றுவதற்காக தன் அப்பாவின் மிக நீண்டகால ஆதரவாளரான தேவராஜியை புறக்கணிக்கத் துணிந்து விட்டார் கதிர் ஆனந்த்.
திமுக மொத்தம் 11 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் ஐந்து பேர் தேவராஜ் வசம் இருக்க மீதி 6 பேர் பாரியின் தலைமையில் அணிவகுத்துள்ளனர். மொத்தம் பதினெட்டு கவுன்சிலர்களில் ஆறு பேரை வைத்துக்கொண்டு சேர்மன் ஆவது எப்படி?
தேவராஜின் மருமகளான காயத்ரி பிரபாகரன் உட்பட ஐந்து கவுன்சிலர்களும் சங்கீதா பாரிக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும். இது கழகப் பொதுச் செயலாளரின் முடிவு. மீறினால் நன்றாக இருக்காது என்று கதிர் ஆனந்த் தரப்பினர் அந்த 5 கவுன்சிலர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.
ஒருவேளை சேர்மன் தேர்தலில் தேவராஜின் ஆதரவு கவுன்சிலர்கள் கதிர் ஆனந்த் ஆதரவு பெற்ற சங்கீதா பாரியை ஆதரித்து வாக்களிக்காவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தில்… பாமகவை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்களும் தங்களுக்கே ஆதரவளிக்க வேண்டுமென்று ஜிகே மணி வரை கதிர் ஆனந்த் பேசி இருப்பதாகவும் ஆலங்காயம் வட்டாரத்தில் தகவல்கள் உலவுகின்றன.
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததுமே பாரியின் தலைமையில் சங்கீதா உட்பட 6 கவுன்சிலர்கள் ஓசூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஒரு சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பதவியேற்பு நாளான அக்டோபர் 20ஆம் தேதி காலை சரியாக 10 மணிக்கு ஆலங்காயம் வந்தனர்.
பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் ஆறு பேரையும் பாதுகாப்பு வளையம் அமைத்து வேறு வழியாக அழைத்துச் சென்று அவர்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே சென்ற தேவராஜின் ஆதரவாளர்கள்,”இது நல்லா இருக்கா. நீங்க இப்படி பண்ணலாமா?, என்று கேட்டு ஆரம்பிக்க அடுத்தடுத்து வார்த்தைகள் தடித்து இரு தரப்பினரும் மோதிக் கொள்ளத் தொடங்கினார்கள்.
போலீசார் ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தி துரைமுருகனின் எஸ்டேட் மேற்பார்வையாளர் ஆன பாரியின் ஆதரவு கவுன்சிலர்கள் அமர்ந்திருந்த வாகனத்தை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அவர்கள் மீண்டும் ஓசூருக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 22 ஆம் தேதி சேர்மன் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்… அனைத்து திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு துரைமுருகன் கதிர் ஆனந்த் ஆசிபெற்ற சங்கீதா பாரி சேர்மேன் ஆவாரா?, சேர்மன் தேர்தலில் திமுகவின் இங்கு இருக்கும் கோஷ்டி களுக்குள் கடுமையான மோதல் ஏற்படுமா என்று தெரியவில்லை.
இதில் ஒரு தரப்பினருக்கு திமுக பொதுச் செயலாளரின் ஆதரவே இருக்கிறது என்ற நிலையில் நாளை ஒரு நாளுக்குள் என்ன வேண்டுமானாலும் மாற்றங்கள் நடக்கலாம் என்கிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட திமுகவினர்.
இம்மாவட்டத்தின் உள்ளாட்சி தேர்தல் பொறுப்புகளை அமைச்சர்கள் நேருவும் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கவனித்து வந்தனர். இப்போது எம் ஆர் கே பன்னீர்செல்வம் உடல் நலம் குன்றி சிகிச்சையில் இருப்பதால் நேருவிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர் தேவராஜி ஆதரவாளர்கள்.
.
**வேந்தன்**
�,”