சுயமரியாதை பற்றி பேசும் திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மறந்துவிடுவார்கள் போல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாத இறுதியில் கரூர் திமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கூட்டணி கட்சி சார்பில் ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக அலுவலகத்திலிருந்து தான் அவமானப்படுத்தப்பட்டதாக வெளியேறினார் ஜோதிமணி.
இந்நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொ.ம.தே.க. எம்.பியான நாமக்கல்லைச் சேர்ந்த சின்ராஜ் நேற்று (ஜூலை 11) ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்மையில் லத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து ஆவணங்களைத் தனது அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அங்குள்ள ஆவணங்கள் எனது பார்வைக்கு வைக்கப்படவில்லை.
என்று கூறி ஊராட்சித் தலைவர், செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரைத்தார் சின்ராஜ். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, எம்.பி. தலைமையில் கூட்டப்பட வேண்டிய மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம், மின்வாரிய குழு கூட்டம், சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறவில்லை. இது தொடர்பாக ஆட்சியருக்கு கடிதம் எழுதியும் சரியான பதில் வரவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில், ஆட்சியர் வந்து என்ன கோரிக்கை என்று எம்.பி.யிடம் கேட்க, முதலில் என் அதிகாரம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று ஒரு ஃபைலை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற ஆட்சியர் மீண்டும் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதோடு, மின்வாரிய குழு கூட்டம் நடத்துவதற்கு, கமிட்டி தேர்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் பிறகு நடத்தி கொள்ளலாம் எனவும் கூறினார். ஆட்சியரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து 3 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி.சின்ராஜ் போராட்டத்தைக் கைவிட்டார்.
மேற்குறிப்பிட்ட இந்த இரு சம்பவங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, “ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்பி சின்ராஜ் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் திமுக அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல” என்று விமர்சித்துள்ளார்.
-பிரியா