அதிமுக சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 5) சுக்கிர ஓரையில் வெளியிடப்பட்ட நிலையில், திமுகவின் வேட்பாளர் பட்டியல் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் திமுகவின் தேர்தல் மாநாடு திட்டமிடப்பட்டு பிப்ரவரி முதல் வாரமே ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரான கே. என். நேரு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஜெட் வேகத்தில் செய்துகொண்டிருந்த நிலையில், தேனியில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், மார்ச் 14 ஆம் தேதி திமுக திருச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார் கட்சியின் தலைவர் ஸ்டாலின்.
மாநாட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதை ஒட்டி மேடையிலேயே ஸ்டாலினை சந்தித்து நேரு மகிழ்ச்சியைப் பகிர்ந்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழகத்துக்கான தேர்தல் தேதி திடீரென அறிவிக்கப்பட்டு, தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.
இதையடுத்து திருச்சியில் நடக்க இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. பிரம்மாண்ட மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நேருவுக்கு இதனால் லேசான ஏமாற்றம்தான் என்றாலும்…. ‘சரி விடுங்கய்யா. இடமெல்லாம் அப்படியே இருக்கட்டும். ஏற்பாடெல்லாம் அப்படியே இருக்கட்டும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெற்றி விழாவை மாநாடா இதே மேடையில நடத்திடுவோம்”என்று நம்பிக்கை பொங்க திருச்சி திமுகவினரிடத்தில் தெரிவித்தார் நேரு.
என்றாலும் திருப்புமுனை மாநாடாக பார்த்துப் பார்த்து செய்த நேருவுக்கு உள்ளூர வருத்தம் இருக்கத்தான் செய்தது. இதை உணர்ந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், நேருவின் முயற்சிகளும், கட்சியினரின் உழைப்பும் வீண் போகாத வகையில் தன் பிறந்தநாளான மார்ச் 1 ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அன்று டி.ஆர்.பாலு, கே.என். நேரு ஆகியோருடன் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
“ வரும் 7-ஆம் தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளைக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் நேரு மேற்கொண்டு இருக்கிறார்.
7-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான இலட்சியப் பிரகடனத்தை தமிழகத்திற்கான, தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிட இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலை நோக்குப் பார்வையை அந்த நிகழ்ச்சியில் வெளியிடவிருக்கிறேன்.
அடுத்த 10 ஆண்டிற்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வரும் சூழ்நிலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். இதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கையும் அதில் நான் வரையறுத்திருக்கிறேன்.
இதுவரை தமிழக மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் அடிப்படையில் கழக மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து அந்தத் தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 7 அன்று திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அந்தத் தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை நான் வெளியிடவிருக்கிறேன். தமிழகத்திற்கான எனது தொலைநோக்குப் பார்வை அறிக்கையினை, அடுத்த 20 நாட்களுக்குள்ளாக 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். அதை நமது கழக உடன்பிறப்புகள் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், ஊராட்சி, கிளைகள், வார்டுகள், கிராமங்கள் அளவில், பட்டிதொட்டிகள் தோறும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்”என்றார்.
இதைக் கேட்டு நேரு மிகவும் மகிழ்ந்தார். மீண்டும் இப்போது சிறுகனூரில் சிறப்புப் பொதுக்கூட்டம் என்ற பெயரிலான மாநாட்டுப் பணிகள் வேகம் அடைந்திருக்கின்றன.
நாம் இதுகுறித்து திமுக வட்டாரத்தில் பேசுகையில், “சிறப்புப் பொதுக்கூட்டம் என்ற வகையில் இதை திமுக நடத்துகிறது. அதன் அடிப்படையில் மாநாடு என்பதை விட சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது தமிழகம் முழுவதிலுமிருந்தும் தேர்தல் வேலைகளை தள்ளி வைத்துவிட்டு தொண்டர்கள் வர வேண்டாம் என்று சொல்லப்பட்டுவிட்டது. திருச்சியை ஒட்டி புதுக்கோட்டை, கரூர், இந்தப் பக்கம் தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மட்டும் திமுக தொண்டர்கள் இந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முதலில் இந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் திட்டம் இருந்தது. ஆனால் மிகப்பெரிய கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால், வாய்ப்பு கிடைக்காத சிலர் தங்களது உணர்வலைகளை திடீரென வெளிப்படையாக காட்டிவிட்டாலோ, பேட்டிகள் மூலம் கொட்டிவிட்டாலோ அது நன்றாக இருக்காது என்பதால் இந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது என்ற முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது. அனேகமாக பத்தாம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம்” என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,