மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“அரசியலில் வெளியே அறிக்கை மோதல்கள், சமூக தள சாடல்கள் எல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும், எந்த கட்சிகள் இப்படி மோதிக் கொள்கின்றனவோ அதே கட்சிகளுக்குள் உள்ளுக்குள் வேறு சில உரையாடல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். அதுவும் தேர்தல் நேரத்தில் இதற்கு கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. வாசல் கதவைத் திறந்து வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதே, ஜன்னல் கதவுகளுக்கு இடையில் ஜாடை பேச்சுகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில்தான் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே புற அரசியல் களத்திலும் சமூக தளத்திலும் கடுமையான மோதல்கள் நடந்தாலும் உள்ளுக்குள் வேறு சில நடவடிக்கைகளும் அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவின் மேல்மட்டப் பிரமுகர்கள் சிலர் பாஜகவின் டெல்லி மேல்மட்டத்தினரோடு தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களை திமுக பாஜகவின் அறிக்கை மோதல் பேச்சுகள் எந்த வகையிலும் பாதிப்பதில்லை.
‘திமுக இப்போது பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என அவசியமில்லை. அப்படி வைத்தால் அது இரு தரப்புக்கும் நியாயப்படுத்தும் வகையிலும் இருக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத்தான் எங்களுக்கும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த சூழலில் நீங்கள் காங்கிரசை கூட்டணியில் சேர்த்து அவர்களும் வெற்றி பெற்றால்… அதன் பின் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் ராஜ்யசபாவுக்கும் செல்லும் சூழல் உருவாகும். அதனால் திமுகவும் பாஜகவும் இப்போதும் இருக்கும் தூரத்திலேயே இருப்போம். 2024 தேர்தலில் வேண்டுமானால் நாம் கூட்டணி சேரலாம். அதேநேரம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கக் கூடாது’ என்பதுதான் பாஜகவின் டெல்லி தரப்பு திமுகவின் டாப் சோர்ஸுக்கு வைத்திருக்கும் நிபந்தனை.
ஆனால் திமுக தரப்பில் அதற்கு பிடி கொடுக்கவில்லை. ‘காங்கிரசை எங்கள் கூட்டணியிலிருந்து அகற்ற இவ்வளவு பாடுபடுகிறீர்கள், சரி. ஆனால் உங்கள் கூட்டணியில் அதிமுகவை வைத்திருக்கிறீர்கள். திமுகவுக்கு எதிரான மக்களுக்கு எதிரான அதிமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் பாஜக ஆதரவு இல்லாமல் நடக்கவே முடியாது. அதிமுக அரசின் இந்த ஆட்டத்துக்குக் காரணமே பாஜகவின் மத்திய அரசின் ஆதரவு நிலைப்பாடுதான். அதை விட்டுவிடாமல் எங்களை காங்கிரஸை விட்டுவிடுங்கள் என்று கேட்பது என்ன நியாயம்?’ என்பதுதான் திமுக தரப்பில் கேட்ட கேள்வி.’
அதற்கு பாஜக தரப்பில், ‘அதிமுகவால் தமிழகத்தில் பாஜகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், பாஜகவால்தான் அதிமுகவுக்கு அதிக பலன்கள் கிடைத்திருக்கிறது என்றும் எங்களுக்கும் ரிப்போர்ட் வந்திருக்கிறது. ஏற்கனவே அதிமுக அரசின் ஒவ்வொரு அமைச்சரைப் பற்றிய சொத்து விவரங்கள், அவர்களது நெருக்கமானவர்களின் சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித்துறை மூலம் தகவல் சேகரித்து வைத்திருக்கிறோம். இந்தப் பட்டியலை பிப்ரவரியிலேயே எடுத்து வைத்துவிட்டோம். உத்தரவிட்டால் 48 மணி நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தக் கூடிய அளவுக்கு வருமான வரித்துறை முழு தயார் நிலையில் இருக்கிறது. அதனால் அதிமுக அமைச்சர்கள் மீது நாங்கள் வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கத் தயார். ஆனால், நீங்கள்( திமுக) காங்கிரசுடனான உறவை முறிக்க வேண்டும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
திமுக தரப்போ, ‘உங்களை எப்படி நம்புவது. அதிமுக அமைச்சர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுங்கள். அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்று மீண்டும் பொடிவைத்தே பேசியிருக்கிறார்கள்.
இந்த திரைமறைவு பேச்சுகளில் முன்னேற்றம் தெரிந்தால் தமிழ்நாட்டு அர்சியலில் மிகப் பெரிய மாற்றங்கள் படிப்படியாக அரங்கேறலாம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
�,