திமுக கூட்டணியில் முக்கியக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று (மார்ச் 8) தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்டது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்று தொடர்ந்து போராடிய மார்க்சிஸ்ட் கட்சியை திமுக போராடி சம்மதிக்க வைத்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளைப் போலவே 6 தொகுதிகளில் போட்டியிட சம்மதிக்க வைத்துவிட்டது.
இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சௌந்தரராஜன், பி.சம்பத் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து 6 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் பாஜக கூட்டணியை காலூன்ற விடக்கூடாது என்ற அரசியல் கடமையை செய்திருக்கிறோம்”என்று கூறினார்.
திமுக கூட்டணியில் இனி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. அக்கட்சி இன்று மாலை திமுகவுடன் மீண்டும் பேச்சு நடத்த உள்ளது.
நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், “திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு 6 தொகுதிகளையே ஒதுக்கியிருக்கிறது. அந்தக் கட்சிகளின் பலத்துக்கு இது குறைவான தொகுதிகள்தான் என்று தெரியும். ஆனாலும் எப்படி சம்மதிக்கப் போகிறார்களோ என்ற ஒரு சந்தேகம் எங்கள் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கும் தலைவருக்கும் கூட இருந்தது. ஆனால் இந்தக் கூட்டணியை ஒன்றாக்கி பிரச்சினைகளை தீர்த்து வைத்ததற்கு ஒரு வகையில் பாஜகதான் முக்கியக் காரணம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போயிருந்தால், திமுக கூட்டணியில் இவ்வளவு கறார் காட்டியிருக்க முடியாது.சில கட்சிகள் அதிமுக அணிக்குப் போகவும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அதிமுக அணியில் பாஜக இருந்ததால் மட்டுமே, திமுக கூட்டணி ஒன்றுபட்ட கூட்டணியாக திகழ்கிறது” என்கிறார்கள்.
மேலோட்டமான பார்வையாக இருந்தாலும் திமுக கூட்டணியை இன்று ஒன்றுபடுத்தியிருப்பதில் பாஜகவுக்கே அதிக பங்கிருக்கிறது.
**-வேந்தன்**
�,