டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக்குள் கூட்டணி-திமுக விடம் உள்ளாட்சி மூவ்!

politics

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் சில படங்களை இறக்குமதி செய்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை ஒட்டி திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை சொன்ன படங்கள்தான் இன்ஸ்டாகிராம் இறக்குமதி செய்தவை.

இந்த சந்திப்புகளின் பின்னணியை, வாட்ஸ்அப் டைப் செய்யத் தொடங்கியது.
“மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தாங்கள் பெற்ற உறுப்பினர்களோடு தமிழக காங்கிரஸ் தலைவர் கே .எஸ் .அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று ஸ்டாலினை பரபரப்பான சூழலில் சந்தித்தனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர் .பாலு மற்றும் திமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் ஸ்டாலினை சுற்றி நின்று கொண்டிருக்க… தங்களது கட்சி நிர்வாகிகளோடு இந்த தலைவர்கள் முதல்வரை சந்தித்தனர்.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தோடு… அடுத்தகட்டமாக மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்- துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர்- துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்பதை கிடைத்த அந்த சில நிமிடங்களில் ஸ்டாலினிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
பார்க்கலாம் பார்க்கலாம் என்று பதில் சொல்லி கை கூப்பி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினை சந்தித்து விட்டு அறிவாலய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ‘மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் ,துணைத்தலைவர் பதவிகளுக்கு எங்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறு ஒரு பட்டியலை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அவர் அதை பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்’ என்று கூறியிருக்கிறார்.
திமுக கூட்டணியின் மற்ற கட்சிகளும் தங்களது தேவைகளை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் பட்டியல் மூலமாக தெரிவித்திருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி திருச்சி, கோவை மேயர் பதவிகளை ஏற்கனவே வகித்த அடிப்படையில் அதை கேட்கலாம் என்று கட்சிக்குள் கோரிக்கைகள் உள்ளன. ஆனால் கோவையை வலியுறுத்தாமல் திருச்சியை மட்டும் வலியுறுத்துகிறது காங்கிரஸ் தலைமை.
அதை நேரம் இன்று காலை கூட்டணி கட்சிகளுக்கு மேயர் வாய்ப்பு உண்டா என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், திமுக மாவட்ட செயலாளர்கள் அந்தந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் மேயர் என்ற பதவியைக் கேட்டு இந்த பக்கம் வராதீர்கள் என சொல்லிவிட்ட தகவலை தெரிவித்திருந்தோம்.
காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் மூலம் இந்த தகவல் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியை சென்றடைந்தது”என்று வாட்ஸ் அப் தகவல் கூற.., “இங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது” என ஃபேஸ்புக் மெசஞ்சர் குறுக்கிட்டது.
.
“திமுகவின் கூட்டணிக் கட்சி மாவட்ட நிர்வாகிகளிடம் திமுக மாவட்டச் செயலாளர்கள் இப்படி தெரிவித்துள்ள தகவல் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு மட்டுமல்ல மற்ற கூட்டணிக் கட்சித் தலைமைக்கும் சென்றுள்ளது‌. இந்த நிலையில் கே. எஸ். அழகிரி, திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் இது குறித்து தங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தி வருவதாக ஒரு தகவல் தற்போது கசிகிறது.
‘நாமெல்லாம் தனித் தனியாகச் சென்று நமது கட்சிகளுக்கு பதவி கேட்கும் போது திமுக எளிதாக அலட்சியப் படுத்தி விடுகிறது. தேர்தலுக்கு முன் போட்டியிடும் இடங்கள் கேட்ட போதும் இப்படித்தான் நடந்தது. அதனால் நாம் திமுக கூட்டணிக்கு உள்ளேயே ஒரு கூட்டணியாக செயல்பட்டு திமுகவை தவிர பிற கூட்டணி கட்சிகளுக்கு 15 சதவீத பதவிகளை தருமாறு ஸ்டாலினை இணைந்து வற்புறுத்துவோம். தனித்தனியாக போனால் நமக்கு கிடைப்பதைவிட இப்படி இணைந்து சென்றால்
பதவி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்’ என இந்தத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருப்பதாக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தகவல்கள் கசிகின்றன.

இதை திமுக தலைமை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதைப் பொருத்துதான் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்ற மெசேஜ் க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது மெசேஞ்சர்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *