தங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகியவை அறிவித்துள்ளன.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. மதிமுக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகளும், விசிக விழுப்புரம் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றன. இப்போதும், அந்தக் கூட்டணி தோழமையோடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க வலியுறுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், தனி சின்னம் பெற்று தேர்தலைச் சந்திப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி படத்திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடும், தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்ற தகவலைத் தெரிவித்தார்.
திமுக கூட்டணி தொடர்பான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து பற்றிய கேள்விக்கு, “பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அவர் தற்போது என்ன பொறுப்பில் உள்ளார்? திமுகவுடன் கூட்டணி குறித்து பேச அவர் என்ன அக்கட்சியின் தலைவரா?” என்று கேள்விகளை எழுப்பினார்.
இது போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர், “2021 சட்டமன்றத் தேர்தலில் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்குப் பொருந்தாது” என்று கூறியுள்ளார்.
**எழில்**�,