திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் போட்ட பதிவு, சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதனையடுத்து, எடப்பாடிதான் அடுத்த முதல்வர், ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் எனப் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் குறித்து தனிப்பட்ட கருத்துகளைப் பகிர வேண்டாம் எனவும், அப்படி கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 17) பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “அதிமுகவில் தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அதிமுகவில் சூழல் சுமுகமாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், எங்களுடைய கூட்டணியைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான். நாங்கள் சொன்னது போல அதிமுகவால் சொல்ல முடியவில்லை” என்று சாடினார்.
10 எம்.பி.க்களை வைத்துள்ள உங்களை விட பாஜக அதிகமாகப் பணியாற்றுவது போல தெரிகிறதே என்ற கேள்விக்கு, “பாஜக தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக கார் தருகிறோம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இருப்பை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இருக்கிறது. எங்கள் கூட்டணியிலுள்ள கட்சிகள் அழுத்தமான இடத்தில் உறுதியாகச் செயல்படுகிறோம்” எனக் கூறினார்.
ரஜினி, கமல் இருவரில் யாரை உங்களது அணிக்கு வரவேற்பீர்கள் எனக் கேட்க, “எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்” எனப் பதிலளித்தார் கே.எஸ்.அழகிரி.
**எழில்**�,