முன்பெல்லாம் டீக்கடை பெஞ்ச்சில் காலையில் பேப்பர் படிக்கும் நேரத்தில், அரை மணி நேரம் உட்கார்ந்தால் அடுத்து எந்தக்கட்சி ஆட்சியைப் பிடிக்குமென்று சொல்லிவிடலாம். இப்போதெல்லாம் டீக்கடை பெஞ்சுகளும் குறைந்துவிட்டன. பொதுவெளியில் பேசுவதும் அச்சத்திற்குரியதாகவும், அநாகரீகமானதாகவும் கருதும் நிலை உருவாகிவிட்டது. அதனால் மக்களின் மனங்களில் உள்ளுக்குள்ளே புதைந்திருக்கும் எண்ணத்தைத் தெரிந்துகொள்வது சவாலுக்குரிய விஷயமாகிவிட்டது. அதைத் துல்லியமாகக் கணித்து, இதுதான் மக்கள் மனநிலை என்று கண்டறிய முடியாமல்தான் கட்சிகள் தோற்றுப் போகின்றன. அதைக்கண்டுபிடித்துச் சொல்வதற்காக முளைத்திருப்பவைதான் கார்ப்பரேட் கன்சல்டன்ஸி நிறுவனங்கள். தமிழக மக்களுக்குத் தெரியும்படி சொல்வதானால் ‘ஐபேக்’ நிறுவனம்.
கழகங்கள் எல்லாம் இப்போது கம்பெனிகளைப் போல மாறிவிட்டதால், கார்ப்பரேட் கன்சல்டன்ஸி தருவதுதான் தேர்தல் வியூகம். அவர்கள் பரிந்துரைக்கிற பட்டியலில் இருப்பவர்கள்தான் வேட்பாளர்கள்.
இலைமறை காய்மறையாக இருந்த இந்த கன்சல்டன்ஸி கலாச்சாரத்தை, பகிரங்கமாக ஒப்பந்தம்போட்டு தமிழகத்தில் அரங்கேற்றம் செய்த பெருமை, திமுகவையே சேரும். வரும் தேர்தலில் திமுக ஜெயித்தால் யாருக்கு லாபமோ இல்லையோ, பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்துக்கு அது இன்னொரு ஜாக்பாட்தான். அண்ணன் காட்டிய வழியம்மா என்று அதிமுகவும் இதில் இறங்கிவிட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பரும் சர்வே நிறுவனம் நடத்துபவருமான பிரதீப் பண்டாரியை அதிமுக தேர்தல் ஆலோசகராக நியமிக்க கடந்த ஆண்டில் பேச்சுவார்த்தை நடந்தது. என்ன காரணமென்றே தெரியாமல் அந்தக் கூட்டணி தேர்தல் வரும்முன்பே முறிந்து போய்விட்டது.
திமுகவின் பலம் பலவீனங்களைத் தெரிந்து கொள்வதற்காகவோ என்னவோ, திமுகவுக்கு தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றிய சுனிலை தேர்தல் ஆலோசகராக நியமித்துக்கொண்டது அதிமுக தலைமை.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின் ஸ்டாலினுக்கு எதிராக அரசியல்களத்தில் முதல்வர் வேட்பாளராக நிற்பதற்கு யாருமேயில்லை என்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக்கி முதல்வர் வேட்பாளர் என்ற இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியதில் சுனிலின் பங்கு அதிகம்.
எந்த வகையிலும் வெற்றியைக் கைநழுவவிடக்கூடாது என்பதற்கு ‘மைக்ரோ’ அளவில் சர்வேக்களை நடத்தி, மக்களின் மனங்களில் இடம் பெறுவதற்கான யுக்திகளைச் சொல்வதுதான் இந்த நிறுவனங்களின் பணி.
இந்த விஷயத்தில் அதிமுகவை விட திமுகதான் அதிதீவிரமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் மிகக்குறைவான வாக்குவித்தியாசத்தில் ஆட்சியை நழுவவிட்ட அனுபவம் அந்தக் கட்சியின் நகர்வுகளில் இன்னும் தெளிவைத் தந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த முறை ஒவ்வொரு வாக்கையும் நழுவவிடக்கூடாது என்பதில் திமுக தலைமை தெளிவாகவுள்ளது. இதன் காரணமாக, பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனம் தரும் எந்த ஆலோசனையையும் திமுக தட்டிக்கழிப்பதாக இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலிருந்து, எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற அளவிற்கு திமுகவின் தேர்தல் பணிகளில் ‘ஐபேக்’ தலையீடு அதீதமாகவுள்ளது.
2014 லோக்சபா தேர்தலின்போது, மோடிக்கு ஆலோசகராக இருந்ததில் துவங்கி டெல்லியில் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி என அடுத்தடுத்து பலரையும் ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனம், இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிறுவனம் எந்த முறையில் சர்வே எடுக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் தான் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் பெரும் ஆர்வத்தில் இருக்கின்றனர். ஆனால் யாருக்கும் தெரியாத அந்த யுக்திகள்தான் ‘ஐபேக்’ நிறுவனத்தின் வெற்றிச் சூத்திரம் என்கிறார்கள் அதில் பணியாற்றும் அலுவலர்கள்.
பிகே, சுனில் ஆகியோரின் ஆலோசனை உளவுத்துறையும் ஊடகங்களும் அடிக்கடி சர்வே சர்வே என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. உளவுத்துறை சர்வே என்பது பொதுமக்களிடம் சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்துத் தருவது மட்டும்தான். ஊடகங்கள் தாங்கள் நடத்தும் சர்வேக்களை எப்படி நடக்குமென்பதை விவரிக்கின்றன. ஆனால் ஆலோசனை நிறுவனங்கள் நடத்தும் சர்வேக்கள் யாருமறியாத ரகசியமாக இருக்கின்றன. அந்த சர்வே எப்படித்தான் நடக்கிறது, எவ்வளவு செலவாகிறது என்று இந்த நிறுவனங்களில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்தோம்.
அவர்கள் தந்த தகவல்கள், நம்மைத் தலை சுற்ற வைப்பதாக இருந்தன…
‘‘பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனம், மக்களிடம் எடுக்கும் சர்வே தனித்துவமானது. அந்த சர்வே ரிப்போர்ட் அடிப்படையில்தான், அந்தக் கட்சிக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி தேர்தல் வியூகங்களை வகுத்துத் தருகிறது. தமிழகத்தில் மக்களின் மனநிலையை அறிவதற்காக சர்வே எடுக்கும் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே ‘ஐபேக்’ துவக்கிவிட்டது. அப்போது கொரோனா காலமாக இருந்ததால், போனிலேயே பேசிப்பேசி சர்வே எடுத்தனர். கடந்த நவம்பருக்குப் பின்புதான் நேரடியாக களத்தில் இறங்கி சர்வே நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் நேரடியாக சர்வே மேற்கொள்வதில்லை. இந்தியாவிலுள்ள பிரபலமான 4 சர்வே நிறுவனங்களிடம் இந்தப் பணியை பிரித்துக் கொடுத்திருக்கிறது.
நான்கு சர்வே நிறுவனங்கள் தரும் தகவல்களையும் ஒருங்கிணைத்து, பல குறுக்கு நெடுக்கு விபரங்களை ஆய்வு செய்தே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். கடந்த ஆண்டின் இறுதியில் சர்வே எடுக்கத் துவங்கியபோது, ஆறு கேள்விகள்தான் அந்த சர்வே படிவங்களில் இடம் பெற்றிருந்தன. அதனால் ஒரு ஆளிடம் சர்வே எடுக்க 100 ரூபாய் என்ற அளவில் கட்டணம் தரப்பட்டிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க கேள்விகள் எண்ணிக்கை அதிகமாகி, அதற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
உச்சக்கட்டமாக தேர்தல் அறிவிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக 20 கேள்விகள் அடங்கிய படிவங்கள் தரப்பட்டு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் வீதமும் சில பகுதிகளில் 400 ரூபாய் வீதமும் கட்டணம் தரப்பட்டது. ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு 3000 பேரை சர்வே எடுத்தால்தான் ஒரு துல்லியமான முடிவை அறியமுடியும் என்பதுதான் ‘ஐபேக்’ நிறுவனத்தின் கணக்கு. இதனால் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு சராசரியாக 2 லட்சம் வாக்காளர்கள் என்று கணக்கிட்டு, தொகுதிக்கு 6000 பேர் வீதம் சர்வே எடுத்திருக்கிறார்கள். ஒரு நபருக்கு 300 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் 6000 பேரிடம் சர்வே எடுப்பதற்கு 18 லட்ச ரூபாய் வரை செலவாகும். தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சர்வே எடுப்பதற்கு 42 கோடி ரூபாய் செலவாகியிருக்கும். தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாரந்தோறும் இந்த சர்வே எடுக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் ‘ஐபேக்’ கடைசியாக எடுத்த சர்வேயின் படி, திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த சர்வே ரிசல்ட் விபரம், ஆளும்கட்சிக்குத் தெரியவந்திருக்கிறது. அதற்குப் பின்புதான் விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, வன்னியர் உள் இடஒதுக்கீடு என அடுத்தடுத்து பல அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்புகளால் தமிழக மக்கள் மனநிலையில் பெரும் மாற்றம் வந்திருக்குமென்று அதிமுகவினர் நம்புகிறார்கள்.
அதிமுகவுக்கு வேலை பார்க்கும் சுனில் நிறுவனமும் இதே பாணியில்தான், பல்வேறு நிறுவனங்களிடம் சர்வே எடுக்கும் பணியை ஒப்படைத்திருக்கிறது. திமுகவிற்கு ஆலோசனை தரும் பிரசாந்த் கிஷோர், சென்னையைத் தாண்டி எங்கேயும் களத்தில் இறங்குவதில்லை. ஆனால் சுனிலுக்கு தமிழகம் முழுவதும் அத்துப்படி என்பதால், அவரே களமிறங்கியும் ஆய்வுகளை மேற்கொள்கிறார். கொரோனா காலத்தில் ‘ஐபேக்’ நிறுவனம், போனில்தான் சர்வே எடுத்தது. அப்போதே சுனிலின் நிறுவனம், களத்தில் இறங்கி சர்வே எடுத்துக் கொண்டிருந்தது. அப்போது கிடைத்த முடிவுகளின் அடிப்படையில்தான் அடுத்தடுத்து அதிரடியாக பல திட்டங்களை அறிவித்தது அதிமுக அரசு. அதிமுக சார்பில் சர்வே எடுப்பதற்கு மாதத்துக்கு 10 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு, அவர்கள் எடுத்த சர்வேயில் அதிமுக அதிகபட்சமாக 60 இடங்களில் வெற்றிபெற முடியுமென்று தெரிந்திருக்கிறது.
அந்த சர்வே ரிசல்ட்டுக்குப் பின்பே, பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்தடுத்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக ‘வெற்றிநடைபோடும் தமிழகம்’ விளம்பரங்கள் சூடுபிடிக்கத் துவங்கியதும் அதற்குப் பின்புதான். ஆனால் அதிமுக கடைசியாக எடுத்த சர்வே ரிசல்ட் இப்போது வரை சீக்ரெட் ஆகவே இருக்கிறது. இதேபோல மத்திய உளவுத்துறையை வைத்து தமிழகத்தில் பிஜேபி தலைமையும் சர்வே எடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான், அவர்களும் சில முடிவுகளை எடுக்குமாறு அதிமுக தலைமையை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்றார்கள்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் தரும் சர்வே முடிவுகளை வைத்தே, எந்தத் தொகுதியில் எவ்வளவு செலவிட வேண்டும் என்பதையெல்லாம் கட்சிகள் முடிவு செய்யப் போகின்றன. சர்வே நடத்துவதற்கே வாரத்துக்கு பல கோடிகளை அள்ளித்தரும் கழகங்கள், வாக்காளர்களுக்கு எவ்வளவு துட்டை வாரியிறைக்கப்போகின்றன என்பதை கற்பனை செய்வதே கஷ்டம்தான். இந்தத் தேர்தலில் ஜெயிக்கப்போவது திமுகவா, அதிமுகவா என்பது மக்கள் எதிர்பார்ப்புக்குரிய கேள்வி. ஆனால் அரசியல்வாதிகள் ஆவலோடு பார்க்கப்போகும் ரிசல்ட், ஜெயிக்கப்போவது பீஹாரின் பிரசாந்த் கிஷோரா…தமிழகத்தின் சுனிலா என்பதுதான்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் தேர்தல் வியூகத்தால் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஜெயித்துக் கொள்ளட்டும். ஜனநாயகம் தோற்றுவிடக்கூடாது!
**–பாலசிங்கம்**
�,