நள்ளிரவு 12.59- கடைசி அமெரிக்க விமானம்- துப்பாக்கிச் சத்தம்! இனி யார் கைப்பொருள் ஆப்கன்?

Published On:

| By Balaji

இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்டு 31) நள்ளிரவு கடந்த 12.59 மணிக்கு ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் திடீரென தங்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் ஃபயரிங் செய்ய ஆரம்பித்தனர். யாரை எதிர்த்து இந்த தாக்குதல்?

யாரை எதிர்த்தும் அல்ல… இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை பிடித்திருந்த அமெரிக்காவின் கடைசி விமானம் அப்போதுதான் ஆப்கன் மண்ணில் இருந்து புறப்பட்டு மேலே கிளம்பி வெளிச்சப் புள்ளியாக தெரிந்தது. அதைப் பார்த்த கொண்டாட்டத்தில்தான் தலிபான்கள் அந்த நள்ளிரவில் தங்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் முதல் முறையாக வானத்தை நோக்கி சுட்டு தங்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினார்கள்.

இந்தக் காட்சியை லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிகையின் ஆப்கன் நிருபர் nabihbulos தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

Celebratory gunfire from #Taliban fighters shooting tracer rounds into #Kabul‘s night sky after #US withdrawal. pic.twitter.com/4dhrHz7CNw

— Nabih (@nabihbulos) August 30, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா நேற்று தனது வெளியேற்றத்துக்கான கடைசி கட்டத்தையும் நிறைவு செய்தது.

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் அதற்கு அமெரிக்காவின் பதிலடிகள் என தொடர்ந்தாலும் அமெரிக்கா ஏற்கனவே வாக்களித்தபடி ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக காலி செய்தது. நேற்று இரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து கடைசி ஐந்து விமானங்களும் புறப்பட்டன.

“கடைசி ஐந்து விமானங்கள் கிளம்பிவிட்டன. அமெரிக்காவின் கடைசி காலடியும் இங்கிருந்து புறப்பட்டுவிட்டது!” தலிபான் செய்தித் தொடர்பாளர் ஹேமாத் ஷெர்சாத் கூறினார். “எங்களது மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. … எங்கள் 20 வருட உழைப்பு இப்போதுதான் நிறைவடைந்திருக்கிறது” என்றார் அவர்.

“அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர், எங்கள் நாடு முழு சுதந்திரம் பெற்றது” “என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கூறினார்.

வாஷிங்டனில், அமெரிக்க மத்திய ஆசிய பிரிவின் ராணுவத் தலைவரான ஜெனரல் பிராங்க் மெக்கன்சி, “அமெரிக்காவின் மிக நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். . காபூல் விமான நிலையத்தில் இருந்து EDT நேரப்படி பிற்பகல் 3:29 மணிக்கு கடைசி விமானங்கள் புறப்பட்டன” என்று கூறினார்.

செப்டம்பர் 11, 2001, அமெரிக்கா மீதான இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தனர். ஒசாமா பின் லேடனுக்கும் அவரது அல்கொய்தாவுக்கும் ஆப்கான் அடைக்கலம் கொடுத்தத்தால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் மூர்க்கமாக களமிறங்கியது. இந்த படையெடுப்பு சில வாரங்களில் தலிபான்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றியது. ஒசாமா பின்லேடன் மற்றும் பிற அல்-கொய்தா தலைவர்களை சிதறடித்தது. ஒசாமா பின் லேடன் உள்ளிட்டோரை அமெரிக்கா கொன்ற பின், ஆப்கனில் மேற்கத்திய பாணி அரசைக் கொண்டுவந்தன. பாதுகாப்புப் படைகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்தன. தலிபான்களின் கடுமையான ஆட்சியின் கீழ் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள், கல்வி பெற்று பயனடைந்தனர் மற்றும் பொது வாழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஆனால் தலிபான்கள் தங்களது போராட்டத்தை விட்டுவிடவில்லை. அதன் பிறகான ஆண்டுகளில் ஈராக்கில் மற்றொரு சிக்கல் நிறைந்த யுத்தத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தியதால், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா முழு கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் ஊழலில் மூழ்கியது. அமெரிக்கா கொடுத்த நவீன ஆயுதங்கள் தலிபான்களுக்கு சென்றன. தலிபான்கள் கிராமப்புறங்களிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் மீண்டும் ஒருங்கிணைந்தனர். சமீபத்திய ஆண்டுகளில், அவர்கள் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது தினசரி தாக்குதல் நடத்தினர்.

போரை முடிவுக்கு கொண்டுவர ஆர்வத்துடன், டிரம்ப் நிர்வாகம் 2020 பிப்ரவரியில் தலிபான்களுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது,. அதன் அடிப்படையில்தான் அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்து திரும்ப ஆரம்பித்தனர்.

மலைப்பகுதியான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தவிர இப்போது ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கட்டுப்படுத்துகின்றனர். பஞ்ச்ஷிர் பகுதியில் சில உள்ளூர் குழுவினர் தலிபானை எதிர்க்கின்றனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் இப்போது கடுமையான அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. ஐஎஸ். (கே) எனப்படும் பயங்கரவாத குழுவினரும் தலிபானுக்கு எதிராக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்கா ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறியிருக்கிறது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் ஜோ பிடென் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆப்கானிஸ்தானில் இருந்து திட்டமிட்டபடி வெளியேற்றத்தை நிகழ்த்திய எங்கள் தளபதிகளுக்கும் அவர்களின் கீழ் பணியாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் . ஆகஸ்டு 15 முதல் 31 வரையில், கடந்த 17 நாட்களில் அமெரிக்க துருப்புக்கள் 1லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க குடிமக்கள், நமது கூட்டாளி நாடுகளின் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிய கூட்டாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றி அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் நிகரற்ற தைரியம், தொழில்முறை மற்றும் உறுதியுடன் இதைச் செய்துள்ளனர். இப்போது, ​​ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட இராணுவ இருப்பு முடிந்துவிட்டது. நாளை பிற்பகல் இதுபற்றி நான் அமெரிக்க மக்களிடம் உரையாற்றுகிறேன்

பல்லாயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்ற ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் தங்கள் உயிரைக் கொடுத்த 13 அமெரிக்கர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்து முடிக்க விரும்புகிறேன்”என்ற ஜோ பிடென் அந்த 13 பேர்களின் பெயர்களையும் உச்சரித்தார்.

ஆப்கனை விட்டு அமெரிக்கா 20 வருடங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக முழுமையாக வெளியேறிவிட்டது. நேற்று நள்ளிரவில் ஆப்கான் வானில் இருந்து பிரம்மாண்டமாகப் புறப்பட்டு வெளிச்சப் புள்ளியாக தேய்ந்து மறைந்த அமெரிக்க விமானங்கள் தலிபான்களிடையே கொண்டாடப்பட்டு வருகின்றன. அமெரிக்கா முழுமையாக வெளியேறிவிட்டதாகச் சொன்னாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இன்னமும் ஆப்கன் மண்ணில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவின் கைப்பொருளாக இருந்த ஆப்கன் மண், இனி உலக அரங்கில் எந்த வல்லரசின் கைப் பொருளாகும்? அதனால் என்னென்ன விளைவுகள் உண்டாகும்? இப்பிரச்சினையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அண்டை நாடான இந்தியாவின் பார்வை எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.

மகிழ்ச்சியானாலும் துப்பாக்கிச் சத்தம், துக்கமானாலும் துப்பாக்கிச் சத்தம். இந்த துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையேதான் இனி ஆப்கன் என்பது மட்டும் நிச்சயமாகிவிட்டது.

**-ராகவேந்திரா ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share