திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், தமிழக மக்களுக்குப் பிரச்சினை என்றால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவ்வப்போதுதான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசியது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை படைப்பது போன்று அரசியலிலும் சாதனை படைக்க வேண்டும், அரசியலுக்குப் பெண்கள் அவசியம் வர வேண்டும். 2021க்கு இன்னும் நீண்ட நாட்கள் இல்லை. எல்லோரும் விழிப்போடு இருக்க வேண்டிய தருணம். எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் டிக் டாக்கை தவிர்த்து நல்ல விஷயங்களில் பெண்கள் பங்கேற்க வேண்டும். சேலை போன்ற இலவசங்களுக்கு அடிபணியாமல் பெண்கள் மாறினால் தமிழகத்தில் மாற்றம் வந்துவிடும் என்றார்.
அவரைத்தொடர்ந்து பேசிய விஜயகாந்த், ”தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் விஜயகாந்த் பொறுத்துக் கொள்ளமாட்டேன். விழா முடிந்ததும் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**கவிபிரியா**�,