Xபிறந்தநாள்: விஜயகாந்தின் மெசேஜ்!

Published On:

| By Balaji

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று (ஆகஸ்டு 25) அவரது கட்சியினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகராக இருந்தபோதிலிருந்தே தனது பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் நாளாகக் கொண்டாடி வந்த விஜயகாந்த்… 2005ல் தேமுதிக கட்சி ஆரம்பித்த பிறகு, 2006 ஆம் ஆண்டில் இருந்து தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் இந்த பிறந்தநாளையும் வறுமை ஒழிப்பு தினமாக கொரோனா ஊரடங்கு விதிகளின்படி கொண்டாட தேமுதிகவினர் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். கடந்த வாரம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா வாட்ஸ் அப் கால் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றியும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி பற்றியும் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தேமுதிகவின் வலிமையை பறைசாற்றும் வகையில் இந்த ஆண்டு விஜயகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிறந்தநாள் குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், “வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இதுவரை உலகம் கண்டிராத புதிய வைரஸான கொரோனா வைரஸ் தொற்றால் பல ஆயிரம் உயிர்களை நாம் இழந்துள்ளோம். கொரோனா ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம், வேலையின்மை, பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் வேளையில், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி, கழக தொண்டர்களும், பொதுமக்களும் அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே பிறந்தநாளை கொண்டாட வேண்டும். தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் இந்த முறை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் கிராமப்புற சுகாதார திட்டத்தை, வறுமை ஒழிப்பு தினத்தில் கடைபிடிக்க வேண்டும்.

மக்களின் முதுகெலும்பான கிராமத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கப்படும். ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும். சோடியம், ஹைப்போ குளோரைட் அல்லது பிளீச்சிங் பவுடரை நீரில் கலந்து, கிராம தெருக்களில், ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கபசுர குடிநீர், முகக்கவசம், கையுறை, சோப்புகள், சானிடைசர், கொசு மருந்து தெளிப்பது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள விஜயகாந்த் மேலும்

“ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் வழங்குவது, ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு உணவளிப்பது, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது, விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடைக்கு கலர் பெயிண்ட் அடிப்பது மற்றும் கொரோனா மருத்துவ உபகரணங்களை வழங்குவது போன்ற பணிகளையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை பாராட்டுவது ஆகிய திட்டங்களையும், கிராமப்புற சுகாதார திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினரோடு விஜயகாந்த் இன்று நள்ளிரவு எடுத்துக் கொண்ட செல்ஃபியை தேமுதிகவினர் ஏராளமான அளவில் பகிர்ந்துவருகிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share