தமிழக பாஜக வுடன் அதிமுக மூவர் அணியினர் தொடர்ந்து இன்றும் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்கள்!
நேற்று (மார்ச் 1), மாலைப் பொழுதில் லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் எம்.பி.க்கள் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய நான்கு பேருடன் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், கேசவ விநாயகம், அண்ணாமலை ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் அமமுக வை இணைக்கவேண்டும் எனப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் இன்று மார்ச் 2ஆம் தேதி, அதிமுக சார்பில் எம்.பி. கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், மதியம் 12.40 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வருகை தந்தார்கள்.
பாஜக சார்பில் எல். முருகன், தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், அண்ணாமலை ஆகியோர் பிற்பகல் 2.50 மணிக்கு வந்தவர்கள் மாலை 4.20க்கு வெளியில் சென்றார்கள்.
அதன் பின் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் 3.30 மணிக்கு வந்தவர்கள் 5.00 மணிக்கு தொகுதிகள் பற்றிய பேச்சு முடிந்து வெளியே சென்றார்கள்.
இதற்கிடையே தேங்கிக் கிடந்த தேமுதிக- அதிமுக பேச்சுவார்த்தை மீண்டும் இன்று தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் திமுகவின் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் எ.வ. வேலுவை தொடர்புகொண்டிருக்கிறார். சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். இதை கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் வேலு. ‘அதிமுகவிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே… பிறகு என்ன? ஜாக்கிரதையாக இருங்கள்’என்று ஸ்டாலின் வேலுவிடம் சொன்னதால் அப்படியே வைத்திருந்திருக்கிறார் வேலு.
இந்த நிலையில் இன்று பிரேமலதா தன் சாலிகிராமம் வீட்டில் நடத்திய ஆலோசனைக்குப் பின் மாலை 5.30 மணியளவில் தேமுதிக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு மாலை 5.30 மணிக்கு வருகை தந்துனர்.
கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் டாக்டர் இளங்கோ ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதிமுக தலைமை இறுதிசெய்வதைப் பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு தேமுதிக வந்துவிடுமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிமுகவினர்.
** -வணங்காமுடி**�,