துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்திலிருந்து 2014ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வானவர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக தரப்பிலிருந்து தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற தேமுதிக கடும் முயற்சி எடுத்துவருகிறது.
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவது என்று அதிமுகவுடன் மக்களவை கூட்டணி வைத்தபோது ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிப்ரவரி 29 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பாமகவுடன் போடப்பட்டது போல தேமுதிகவுடன் மாநிலங்களவை சீட் பற்றிய எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை” என்று குறிப்பிட்டார். அதிமுகவின் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவிக்கும் ஜெயக்குமாரின் கருத்துப்படி, தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் இல்லை என்பதே அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக பேசிவிட்டுவந்தார். ஆனாலும், அதிமுக தரப்பிலிருந்து எந்த பாசிடிவ் ரியாக்ஷனும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சுதீஷ் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் வரை நடந்த இந்த ஆலோசனையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக சுதீஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், புதிய நீதிக் கட்சியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் முனைப்பு காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் 3 வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி நீடித்துக்கொண்டே உள்ளது.
**எழில்**
�,