அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக நேற்று (மார்ச் 9 )விலகிய நிலையில் அடுத்த கட்டம் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தனித்துப் போட்டி என்று ஒருபக்கம் அக்கட்சியில் விஜய பிரபாகரன் உள்ளிட்ட சிலர் கூறி வந்தாலும், குறுகிய கால அவகாசத்துக்குள் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடியுமா என்ற கேள்வியும் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. மேலும் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்களை சென்னையிலேயே இருக்குமாறு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தேமுதிக தலைமை நிர்வாகிகள் பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமமுகவின் துணை பொதுச்செயலாளர் பழனியப்பனிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக, பாஜக மீது அதிருப்தியில் இருந்து வரும் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியும் அமமுகவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இன்று (மார்ச் 10 ) சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி பேசுகிறார்களா?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தினகரன், “எங்களுடன் பல கட்சிகள் பேசி வருகிறார்கள். முடிவுக்கு வருவதற்கு முன்பாக இது பற்றிக் கூறினால் நன்றாக இருக்காது. அவர்களுக்கும் தர்மசங்கடமாகி விடும். எனவே இதில் ரகசியம் எதுவுமில்லை. பேசி முடிவுக்கு வந்ததும் உங்களிடம் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் இந்த தகவலை மறுக்கவில்லை.
**வேந்தன்**
�,”