நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த தேமுதிக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், அவரது மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன், தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அகியோர்தான் கட்சியை கவனித்து வருகிறார்கள்.
இதனிடையே, முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஸ்டாலினை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, மே 8ஆம் தேதி தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் முதல்வர் இல்லத்துக்கு சென்றனர்.
அவர்களை காக்க வைக்காமல் உடனடியாக சந்தித்த முதல்வர் ஸ்டாலின், விஜய பிரபாகரனிடம், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து தேமுதிகவினரைக் காக்க வைக்காமல் முதல்வர் உடனடியாக சந்தித்ததாக விஜயகாந்த்திடமும் பிரேமலதாவிடமும் தெரிவித்தார் விஜய பிரபாகரன்.
இதனைக் கேட்டு நெகிழ்ந்து போன விஜயகாந்த், ஸ்டாலினை நேரில் சந்திக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு அவருடன் ஃபோனில் பேச விருப்பப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்டாலினுக்கு போன் போட்டு, அவரது குடும்பத்தினர் விஜயகாந்த்திடம் கொடுத்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு, தனது மெல்லிய குரலில், ‘வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்’ என இரண்டு மூன்று முறை உருக்கமாக கூறினார் விஜயகாந்த். அவருக்கு முதல்வரும் நன்றி தெரிவித்தார்.
இந்த சூழலில், தேமுதிகவில் இருந்தால் தங்கள் எதிர்காலம் சரியாக இருக்காது என கருதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் திமுகவுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக அந்தந்த திமுக மாவட்டச் செயலாளர்களிடமும், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகின்றனர்.
முதற்கட்டமாகச் சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் இரண்டு பேர் திமுகவில் இணைய அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளனர். இவர்களை இணைத்துக் கொள்ள திமுகவினரும் தயாராக உள்ளனர். விரைவில் இருவரும் திமுகவில் இணைவார்கள் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம், தேமுதிக வட சென்னை மாவட்டச் செயலாளர் ப.மதிவாணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,