yவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By Balaji

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வரும் விஜயகாந்த், கொரோனா காலத்தில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. ஆகஸ்ட் மாதம் நடந்த தேமுதிக தொடக்க நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கட்சிக் கொடியை மட்டும் ஏற்றிவைத்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் பிரேமலதா விஜயகாந்துக்கும் தொற்று உறுதியானது. சிகிச்சையில் உடல்நலம் தேறியதையடுத்து கடந்த 2ஆம் தேதி இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றனர். அங்கு கொரோனாவுக்கு பிந்தைய தனிமைப்படுத்துதலில் இருந்து வந்தனர்.

pic.twitter.com/BOrHjjY5IN

— Vijayakant (@iVijayakant) October 6, 2020

இந்த நிலையில் விஜயகாந்த் நேற்றிரவு (அக்டோபர் 6) திடீரென சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவியது.

இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “15 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்த் உடல்நலன் குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share