அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு இழுப்பும்பறிப்புமாக இருந்துவந்த நிலையில், இரண்டு நாள்களாக அதை முடுக்கிவிட்டிருக்கிறது, கூட்டணித் தலைமை.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடந்த மாதம் கடைசியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, அமைச்சர்கள் வேலுமணி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். அதையடுத்து அமைச்சர் தங்கமணியின் அரசு இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், துணைச்செயலாளர் பார்த்தசாரதி, கொள்கைக்கபரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல் கட்டமாக, முன்னர் அதிமுக அணியில் தேமுதிக இடம்பெற்று எதிர்க்கட்சியாக ஆனபோது, 41 தொகுதிகளைப் பெற்றதைக் குறிப்பிட்டு, அதே அளவு தொகுதிகள் வேண்டும் என தேமுதிகவினர் கூறினார்கள். பதிலுக்கு அதிமுக தரப்பிலோ 4 தொகுதிகள் எனக் கூறவும் அதிர்ச்சி அடைந்த தேமுதிகவினர் அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
பிறகு அதிமுக தரப்பு தேமுதிக தரப்பினரை பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்தது. ஆனால் பாமகவுக்கு இணையான தொகுதிகளாவது தராவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பவில்லை; தனியாக நிற்கும் அளவுக்கு தங்களுக்கு பலம் இருக்கிறது என தேமுதிக தரப்பில் கூறிவிட்டார்கள். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் அவருடைய தம்பி சுதிசும் இதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தவும்செய்தனர்.
தேமுதிகவை கூட்டணியிலிருந்து சென்றுவிடாமல் தக்கவைக்கவேண்டும் என்பதில் பாஜக தரப்பும் ஆர்வம் காட்ட, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி சுதிசிடம் பேசியுள்ளார். அப்போது 12 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் தருவதாக எடப்பாடி பழனிசாமி இறுதியாகக் கூறியிருக்கிறார் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி மரியாதைக்காக அவர் கூறியதைக் காதில் வாங்கிக்கொண்ட தேமுதிக தரப்பு, தங்கள் கோபத்திலிருந்து இறங்கிவரவில்லை என்றே நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.�,